Tuesday, June 05, 2007

குருத்தோலைப் பெட்டி செஞ்சி...காதலன் படத் தாலாட்டு!

இதை வைத்துக் கொண்டு குழந்தைக்கும் விளையாட்டு காட்டலாம். காதலியையும் அசர வைக்கலாம். அதை எல்லாம் அனுபவஸ்தர்கள் அறிவார்கள்!
எப்பிடிப்பா? எப்பிடிப்பா??
அட, சும்மா நம்ம குருத்தோலையை வச்சிக்கினு தாம்பா!
போ....போயி குருத்தோலை உரிச்சிக்கினு வா...செஞ்சி காட்டறேன்!

அடப் பாவி...மாதா பிதா குரு தெய்வம்!
அப்பேர்பட்ட "குரு" தோலைப் போயி உரிச்சிக்கினு வரச் சொல்லுறியே! - இது உனக்கே அநியாயமாத் தெரியல?

டேய், குருத்தோலைன்னு பனை மர ஓலையை உரிக்கச் சொன்னாக்கா...நீ ரொம்பத் தான் ஷோக்கு காட்டறியா! இன்னா விஷயம்?
சரி..சரி...இந்தக் குழந்தை ரொம்ப அழுவுது பாரு! இந்த ஓலையை நறுக்கி ஒரு குச்சிக் காத்தாடி செய்யி....வைச்சு விளையாட்டுக் காட்டலாம்!

ஊருக்குப் போயிருந்த போது, நண்பரின் நாலு வயது மகனுக்குப் போக்கு காட்டிக் கொண்டு இருந்தேன்!
கிராமத்தில் கொஞ்ச நாளாச்சும் இருந்தவர்க்கு, இந்தக் குருத்தோலை அப்படி ஒரு பழக்கம். அத வைச்சி பல பொருட்கள் செய்யலாம்! பெட்டி, விசிறி, தோரணம், குடிக்கும் ஏணம் (கப்), குடை, குச்சிக் காத்தாடி... இன்னும் நிறைய.

குருத்தோலையைத் தான் தோரணம்-னு மாவிலையோடு கட்டுகிறோம், பண்டிகை நாட்களில்!
குருத்தோலை ஞாயிறுன்னு பள்ளியில் கொண்டாடிய நினைவுகள்!
எல்லாரும் குருத்தோலை பிடித்துக் கொண்டு பின்னே வர, அவர்களுக்கு முன்னே நான் ஃபாதர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க,
"ஓசானா பாடுவோம்", ன்னு பாடிக்கொண்டே சென்ற ஞாபகம்! ஆனா முடிக்கும் போது, கள்ளத்தனமா...சன்னமா...ஓம் முருகா-ன்னு சொல்லி, டப்புன்னு முடிச்சிடுவேன்! :-)ரொம்ப நாள் கழிச்சு, இந்தப் பிள்ளைத் தமிழ் பதிவு பக்கம் எட்டிப் பார்க்கிறேன்! இப்பல்லாம், ஆபீசில் ஆணி புடிங்கிட்டு, மீதி இருக்குற நேரத்தில...
தமிழைப் பார்ப்பதா, இல்லை பிள்ளைத்தமிழைப் பார்ப்பதா - நீங்களே சொல்லுங்க!

ஒரு அருமையான நாட்டுப்புறப் பாட்டு - தாலாட்டு பாட்டு கிடைத்தது.
அதுவும் பிள்ளைத் தமிழ் தானே! நாட்டுப்புறப் பிள்ளைத் தமிழ்!

காதலன் திரைப்படத்தில்,
இதன் முதல் சில வரிகளைப் பிரபுதேவா பாடுற மாதிரி ஒரு காட்சி! இனிமையான தாலாட்டு வரிகள்!
(அவரு யாரைத் தாலாட்டுகிறார்-ன்னு விவகாரமான கேள்வி எல்லாம் கேக்கக் கூடாது சொல்லிப்புட்டேன்...சரீய்ய்ய்ய் யாருப்பா அது? நம்ம சோதிகா அக்கா தானே! :-)

கொல்லை யிலே தென்னை வச்சி, குருத்தோலைப் பெட்டி செஞ்சி
சீனி போட்டுத் நீ திங்க, செல்லமாய்ப் பிறந்தவளோ!
மரக்கிளையில் தொட்டில் கட்ட, மாமனவன் மெட்டு கட்ட
அரண்மனைய விட்டு வந்த, அல்லி ராணி கண்ணுறங்கு...


ஒலிச்சுட்டி இதோ

ஆனா, இது ஒரு முழு நீள நாட்டுப் பாடல்! அருமையான தாலாட்டு!
வீல் வீல் என்று அழும் குழந்தைகளுக்கு, மருந்து ஊத்தித் தூங்க வைக்கும் கலி காலம் இது!
டாக்டர் தேவைப்பட்டா கொடுக்கச் சொன்னாருன்னு சமாதானம் வேற!
கேட்டா colic baby depressant ன்னு நல்லாவே இங்கிலிபிஷ்ல பேசறாங்க!

ஆனா நம்மூருல எதப்பா ஊத்தித் தூங்க வைச்சாங்க?
தமிழையும் பாட்டையும் அல்லவா தாலாட்டுப் பாலாடையில் ஊற்றித் தந்தார்கள்!
இந்த மாதிரிப் பாடக் கூட வேணாம், அப்படியே கொஞ்சம் ஹம் பண்ணாலே போதும், கொஞ்சும் பிஞ்சுகள் தூங்கிடாதா என்ன?
நாமும் கூடவே சேர்ந்தே தூங்கிப் போயிடுவோமே!
எங்க....................கூடவே, வாய் விட்டு, பாட்டு படிங்க பார்ப்போம்!


(செல்லமாய்ப் பிறந்தவனோ....)கொல்லையிலே தென்னை வச்சி, குருத்தோலை பெட்டி செஞ்சி
சீனி போட்டு நீ திங்க, செல்லமாய்ப் பிறந்தவனோ!
பட்டெடுத்து தொட்டில் கட்ட, பசும் பொன்னால் பொட்டுரைக்க
ஆட்டிடுங்க தாதியரே - என் அன்னக்கிளி கண்ணயர!


(செட்டியார் வளையல் மாட்ட வராரு...) வாருமய்யா வளையல் செட்டி, வந்திறங்கும் பந்தலிலே!
கோல வளையல் தொடும், குணத்துக்கொரு வளையல் தொடும்!
நீல வளையல் தொடும், நிறத்துக்கொரு பச்சை தொடும்!
அள்ளிப் பணம் கொடுத்து, அனுப்பி வைப்பார் உங்களப்பா!

-----------------------------------------------------------------------------


(பெருமாளு தான், காப்பு இருக்க வேணும்) கல்லெடுத்து கனி சொறிஞ்சு, கம்சனையே மார் வகுத்து
ஓலம் செய்யும் மாயனவன், ஒலகளந்த பெருமாளோ!
பச்சை முடி மன்னவரோ? பவழ முடி இராவணனின்
அச்ச மெல்லாம் தீர்க்க வந்த ஆதி நாராயணரோ?


(மாமன் கொண்டாந்த சீதனம்...) பால் குடிக்கக் கிண்ணி, பழம் திங்க சேனோடு
நெய் குடிக்கக் கிண்ணி, நிலம் பார்க்கக் கண்ணாடி
கொண்டைக்குக் குப்பி, கொண்டு வந்தார் தாய்மாமன்.
கல்லெடுத்து உங்க மாமன், காளியோட வாதாடி,
வில்லெடுத்து படை திரட்டும் வீமன் மருமகனோ?
-----------------------------------------------------------------------------
(ஓங்க அப்பாருக்கு காஞ்சிபுரத்து எண்ணெய் ஒத்துக்காதாம், மவனே!...)
காஞ்சிவரத் தெண்ணைய், கண்ணே கரிக்குதுன்னு
தெங்காசி எண்ணெய்க்கு, உங்கப்பா சீட்டெழுதி விட்டாக!
வாசலிலே வண்ணமரம், உங்கப்பா வம்சமே இராச குலம்
இராச குலம் பெற்றெடுத்த ரதமணியே கண்ணசரு!


(அட, இப்படியும் பால் காய்ச்சுவாங்களா, என்ன?....பூனை, புலி, ஆனைப் பால்) பூனைப் பால் பீச்சி, புலிப்பாலில் உறையூத்தி
ஆனைப்பால் காயுதில்ல, உங்கப்பா அதிகாரி வாசலிலே!
வெள்ளிமுழுகி என் கண்ணே, உன்னை வெகுநாள் தவசிருந்து
சனிமுழுகி நோம்பு இருந்து, நீ தவம்பெற்று வந்தவனோ!
-----------------------------------------------------------------------------

(கண்ணுறங்கு கண்ணுறங்கு)
கண்ணுறங்கு கண்ணுறங்கு மாயவனே கண்ணுறங்கு

கண்ணுறங்கு கண்ணுறங்கு மகிழம்பூ கண்ணுறங்கு
கண்ணுறங்கு கண்ணுறங்கு கண்மணியே கண்ணுறங்கு
கண்ணுறங்கு கண்ணுறங்கு பொன்மணியே கண்ணுறங்குபாட்டுக்கு விளக்கம் வேறு வேணுமா என்ன! :-)
கொல்லையிலே தென்னை வச்சி, குருத்தோலைப் பெட்டி செஞ்சி
- அந்த இண்டு இடுக்குப் பெட்டியில்...
ஆலையில் இருந்து கொட்டிய நாட்டுச் சக்கரை, சீனியைப் போட்டு, தின்று கொண்டே இருக்கலாம்!
- யாராச்சும் நெசமாலுமே குருத்தோலைப் பெட்டி செஞ்சிருக்கீங்களா? :-)

Saturday, December 09, 2006

20 மாதக் குழந்தை வாசிக்கும் வாத்தியம்!

என்ன?
இருபது மாதக் குழந்தை வாத்தியம் வாசிக்குதா? அதுவும் ஸ்டைலா!!
Detroit-இல் உள்ள 20 மாதக் குழந்தை, சியாமா கிருஷ்ணா!

அது வாசிக்கும் கொள்ளை அழகை நீங்களே பாருங்க!
அதுவும் காட்சியின் இறுதியில், ஜாகீர் உசேன் ஸ்டைலில் தலையை ஆட்டி, கச்சேரியை முடிக்கிறது! :-) அதை மிஸ் பண்ணாம பாருங்க!!யார் என்று தெரியாவிடினும்,
குழந்தைக்கும், பெற்றோர்க்கும், வாழ்த்துக்கள்!
Budding Talent என்பார்கள்!
வளரட்டும்; இசை மிளிரட்டும்!!

Wednesday, November 29, 2006

அலுவலகத்தில் தாலாட்டு பாடலாமா?

அலுவலகத்தில் என்ன சிந்தனை தெரியுமா? இப்ப என் குழந்தை என்ன பண்ணிக்கிட்டு இருப்பான்?....
தத்தித் தத்தி ஓடுகிறானா இல்லை காப்பாளருக்குத் தொல்லை தராமல் தூங்குகிறானா?
காலையில் வழக்கம் போல் சாப்பிடாமல் துப்பி விட்டானே! மதியமாச்சும் ஒழுங்காச் சாப்பிட்டானா? ஒரு வேளை புதுப் பல்லு முளைக்குதோ?
மற்ற பிள்ளைகளோடு குஷியா விளையாடுறானா இல்லை வம்பு இழுக்கிறானா?

ச்சே என்ன இன்னிக்கு இவன் ஞாபகமாகவே இருக்கு!
முக்கியமான இ-மெயிலில் அட்டாச்மெண்ட் வைக்கமாலேயே மேலாண்மை இயக்குனருக்கும் மற்ற இயக்குனர்களுக்கும் அனுப்பி விட்டேனே! ச்சே! இப்ப இன்னொரு இ-மெயிலில் அசடு வழியணும்!
அந்த அட்டாச்மெண்டால் இந்த அட்டாச்மெண்டை கோட்டை விட்டோமோ?:-)

மாலை 5:00 மணி! CTRL+ALT+DEL
அவசரமாய் நண்பன் ஒருவன் என் அறைக்கு வர, "மச்சோ (மச்சியின் ஐரிஷ் ஆக்கம்), have to go now! see u tomorrow!!", என்று அடித்துப் பிடித்துக் கிளம்பி...

அமெரிக்காவில் பிறந்த என் அற்புதமே!
ஐந்துமணிக்கு மேல் நான் உனக்கு அர்ப்பணமே!!
அவசரமாய்த் தான் வர நினைத்திருந்தேன் அஞ்சுகமே! - அதற்குள்
அடிக்கடி சிக்னல் விழுந்ததால், கொஞ்சம் தாமதமே!!

என்ன ஒரே கவிதையா இருக்குன்னு பாக்கறீங்களா?
நம் பத்மா அரவிந்த் அவர்கள் தேன் துளியில், "ரவி, சுப்ரபாதம் வேகமாக போவது போல பிள்ளைத்தமிழ் இன்னும் வளரவில்லை போல் தெரிகிறதே" என்று ஆர்வத்தை அழகாத் தூண்டி விட்டுட்டார்!
"பிள்ளை"த்தமிழ் தானே! அதான்......தத்தித் தத்தி.......இதோ அடுத்த பதிவு!

இது இலக்கியப் பிள்ளைத்தமிழா? இல்லை
அமெரிக்கா வாழ் தமிழர்களின் பிள்ளைத்தமிழா?
பெற்றோர் பணி முடித்து வரும் வழியிலேயே குழந்தைக்குப் பாடும் தாலாட்டு!
நீங்களே பாருங்கள் ஒளி-ஒலிக் கவிதையை! (Please allow buffering time on slow PCs; A 7 min video)

மேலே கண்டது, இதயப் பூக்கள் என்னும் ஆல்பத்தில்,
New York அருள் வீரப்பன் அவர்கள் பாட்டாய் எழுதி,
முகுந்த் என்கிற Mux, லக்ஷணா இருவரும் பாடியது! இதோ அவர்கள் சுட்டி
சான் பிரான்சிஸ்கோ Bay Areaவில் இந்தியர்களிடையே பிரபலமான இந்திய இசைக்குழு! அனைவரும் Blogswara வலைத் தளத்தில் சிறப்பு சேர்ப்பவர்கள்!
இசைத்தமிழ்ப் பணி செய்பவர்களுக்கு அடியேனின் பாராட்டுக்கள்!

என்ன நண்பர்களே! பார்த்து மகிழ்ந்தீர்களா?
மாலை 5:00 மணி ஆச்சே! இன்னும் கிளம்பலையா வீட்டுக்கு?:-))

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP