Saturday, December 09, 2006

20 மாதக் குழந்தை வாசிக்கும் வாத்தியம்!

என்ன?
இருபது மாதக் குழந்தை வாத்தியம் வாசிக்குதா? அதுவும் ஸ்டைலா!!
Detroit-இல் உள்ள 20 மாதக் குழந்தை, சியாமா கிருஷ்ணா!

அது வாசிக்கும் கொள்ளை அழகை நீங்களே பாருங்க!
அதுவும் காட்சியின் இறுதியில், ஜாகீர் உசேன் ஸ்டைலில் தலையை ஆட்டி, கச்சேரியை முடிக்கிறது! :-) அதை மிஸ் பண்ணாம பாருங்க!!யார் என்று தெரியாவிடினும்,
குழந்தைக்கும், பெற்றோர்க்கும், வாழ்த்துக்கள்!
Budding Talent என்பார்கள்!
வளரட்டும்; இசை மிளிரட்டும்!!

Wednesday, November 29, 2006

அலுவலகத்தில் தாலாட்டு பாடலாமா?

அலுவலகத்தில் என்ன சிந்தனை தெரியுமா? இப்ப என் குழந்தை என்ன பண்ணிக்கிட்டு இருப்பான்?....
தத்தித் தத்தி ஓடுகிறானா இல்லை காப்பாளருக்குத் தொல்லை தராமல் தூங்குகிறானா?
காலையில் வழக்கம் போல் சாப்பிடாமல் துப்பி விட்டானே! மதியமாச்சும் ஒழுங்காச் சாப்பிட்டானா? ஒரு வேளை புதுப் பல்லு முளைக்குதோ?
மற்ற பிள்ளைகளோடு குஷியா விளையாடுறானா இல்லை வம்பு இழுக்கிறானா?

ச்சே என்ன இன்னிக்கு இவன் ஞாபகமாகவே இருக்கு!
முக்கியமான இ-மெயிலில் அட்டாச்மெண்ட் வைக்கமாலேயே மேலாண்மை இயக்குனருக்கும் மற்ற இயக்குனர்களுக்கும் அனுப்பி விட்டேனே! ச்சே! இப்ப இன்னொரு இ-மெயிலில் அசடு வழியணும்!
அந்த அட்டாச்மெண்டால் இந்த அட்டாச்மெண்டை கோட்டை விட்டோமோ?:-)

மாலை 5:00 மணி! CTRL+ALT+DEL
அவசரமாய் நண்பன் ஒருவன் என் அறைக்கு வர, "மச்சோ (மச்சியின் ஐரிஷ் ஆக்கம்), have to go now! see u tomorrow!!", என்று அடித்துப் பிடித்துக் கிளம்பி...

அமெரிக்காவில் பிறந்த என் அற்புதமே!
ஐந்துமணிக்கு மேல் நான் உனக்கு அர்ப்பணமே!!
அவசரமாய்த் தான் வர நினைத்திருந்தேன் அஞ்சுகமே! - அதற்குள்
அடிக்கடி சிக்னல் விழுந்ததால், கொஞ்சம் தாமதமே!!

என்ன ஒரே கவிதையா இருக்குன்னு பாக்கறீங்களா?
நம் பத்மா அரவிந்த் அவர்கள் தேன் துளியில், "ரவி, சுப்ரபாதம் வேகமாக போவது போல பிள்ளைத்தமிழ் இன்னும் வளரவில்லை போல் தெரிகிறதே" என்று ஆர்வத்தை அழகாத் தூண்டி விட்டுட்டார்!
"பிள்ளை"த்தமிழ் தானே! அதான்......தத்தித் தத்தி.......இதோ அடுத்த பதிவு!

இது இலக்கியப் பிள்ளைத்தமிழா? இல்லை
அமெரிக்கா வாழ் தமிழர்களின் பிள்ளைத்தமிழா?
பெற்றோர் பணி முடித்து வரும் வழியிலேயே குழந்தைக்குப் பாடும் தாலாட்டு!
நீங்களே பாருங்கள் ஒளி-ஒலிக் கவிதையை! (Please allow buffering time on slow PCs; A 7 min video)

மேலே கண்டது, இதயப் பூக்கள் என்னும் ஆல்பத்தில்,
New York அருள் வீரப்பன் அவர்கள் பாட்டாய் எழுதி,
முகுந்த் என்கிற Mux, லக்ஷணா இருவரும் பாடியது! இதோ அவர்கள் சுட்டி
சான் பிரான்சிஸ்கோ Bay Areaவில் இந்தியர்களிடையே பிரபலமான இந்திய இசைக்குழு! அனைவரும் Blogswara வலைத் தளத்தில் சிறப்பு சேர்ப்பவர்கள்!
இசைத்தமிழ்ப் பணி செய்பவர்களுக்கு அடியேனின் பாராட்டுக்கள்!

என்ன நண்பர்களே! பார்த்து மகிழ்ந்தீர்களா?
மாலை 5:00 மணி ஆச்சே! இன்னும் கிளம்பலையா வீட்டுக்கு?:-))

Sunday, November 26, 2006

அன்னை மீனாட்சிக்கு ஒரு தாலேலோ!!

மதுரை என்ற சொன்ன அடுத்த நிமிடம் எல்லாருக்கும் உடனே நினைவுக்கு வருவது எது?
ஆண்-பெண், சாதி-மதம், நாடு-மொழி, ஆத்திகம்-நாத்திகம் என்று எல்லாத்துக்கும் அப்பாற்பட்டு உடனே மனதில் தோன்றுவது எது?
ஒளிக்காமல், மறைக்காமல் சொல்லுங்க பார்ப்போம்!..ஆங்! அதே!
மீனாட்சி!!!

அது எப்படி அம்மா இது?
ஊரைச் சொன்ன மாத்திரத்தில் அனைவர் உள்ளங்களிலும் சிக்கென்று நிறைந்து விடுகிறாய்?
இதே சென்னை, திருச்சி என்று பெரிய பெரிய ஊர்களைச் சொன்னால் எல்லாருக்கும் கபாலியோ இல்லை அரங்கனோ மனதில் வருவது இல்லை!
ஒரே விதிவிலக்கு திருப்பதி! அங்கும் பேரைச் சொன்னாலே போதும் வேங்கடவன் வந்து விடுகிறான்; இப்படி அண்ணனும் தங்கையும் இந்த வித்தையை எங்கிருந்து தான் கற்றுக் கொண்டீர்களோ? :-)

சரி, இப்போ மதுரைக்குச் சற்று வெளியில் உள்ள ஒரு பெரிய குளத்துக்குப் போகலாம் வாங்க! வண்டியூர் மாரியம்மன் குளம்!
கூட்டாஞ்சோறு சாப்பிட இதை விட ஒரு நல்ல இடம் கிடைக்குமா? மரங்கள் சூழ்ந்து, சிலு சிலு என்று பசுமையான குளம்!
குளத்தில் தண்ணியே இல்லை! ஒரே பாலா இருக்கு! ஆவின் பால்!!
பசுங்குளம், வெள்ளைக்குளமா மாறிடுச்சா?? இது என்ன ஏதாச்சும் கண்கட்டு வித்தையா?
குமரகுருபரர் என்ற செந்தமிழ்க் கவிஞர் செய்யும் வித்தை இது! எதுக்கு? குழந்தை மீனாளை/அன்னை மீனாளைத் தூங்க வைக்க! பார்க்கலாம் வாங்க!


தென்னன் தமிழின் உடன்பிறந்த
சிறுகால் அரும்பத் தீஅரும்பும்
தேமா நிழற்கண் துஞ்சும்இளஞ்
செங்கண் கயவாய்ப் புனிற்றுஎருமை


நம்ம தமிழும், தென்றல் காற்றும் உடன் பிறப்புக்கள். இரண்டும் ஒரே தெற்குத் திசை மலை - பொதிகை மலையில் தான் தோன்றின!
அகத்தியர் மலை அல்லவா அது! தெற்கில் இருந்து வீசுவதால் தானே தென்றல்ன்னு பேரு! சிறுகால் = தென்றல்; குட்டிப் பாப்பாவின் சிறு கால் போல தென்றல் தத்தித் தத்தி வீசுகிறதே!

இப்படித் தென்றல் வீச, குளக்கரை மாமரங்களின் மேல் தீ ஜ்வாலை பற்றி எரிகிறது! அடச் சும்மாங்க! மாந்தளிர் சிவந்து இருப்பதால், காற்றில் பறபற என்று ஆடிஆடித், தீ அரும்புவது போல் உள்ளதாம்!

அந்த மர நிழலில் ஒரு மாடு தூங்குகிறது; எருமை மாடு;
இந்தக் காலத்தில் தான் எருமை என்றால் நாமெல்லாம், அதுவும் பட்டிணத்துக்காரங்க, ஒரு மாதிரியா பார்க்கிறோம்! ஆனா அதுவும் பால் தரும் ஜீவன் தானே! சிவந்த கண், பெரிய வாய், இப்போது தான் கன்னு போட்ட (புனிற்று) ஒரு தாய் எருமை!

இன்னம் பசும்புல் கறிக்கல்லா
இளங்கன்றுஉள்ளி மடித்தலம் நின்று
இழிபால் அருவி உவட்டுஎறிய
எறியும் திரைத்தீம் புனல்பொய்கைப்


இன்னும் பச்சைப் புல்லைக் கூடக் கடிக்க முடியாமல் உள்ள பச்சிளங் கன்றைப் பார்த்தவுடன், அம்மா எருமைக்கு ஒரே பாசம்.
தானாகவே பால் மடியில் இருந்து சுரக்கிறது. இந்தக் குட்டி என் வயிற்றில் வந்து பிறந்து, சாப்பிடக் கூடத் தெரியாமல் இருக்குதே என்ற ஏக்கம், பாலாகத் தானாய்ச் சுரக்கிறது!
சுப்ரபாதப் பதிவிலும் இதைப் பார்த்தோம். அன்னையிடம் நாமெல்லாம் போவதற்கு முன்பே, நமக்கு என்ன தரலாம் என்று தாயாய் அருள் சுரக்கின்றாள்!

இப்படிப் பால் வழிந்து அருவி போல ஓடுகிறது!
பொய்கையில் (குளம்) உள்ள தண்ணீர் அலைகள் இந்தப் புது பால் அருவியோடு மோதுகின்றன!
பாலும் நீரும் மோதி மோதிக், கடைசியில் குளம் முழுக்க பால்! பாற்கடலோ, பாற்குளமோ என்று நிறைந்து விடுகிறது!

பொன்னம் கமலப் பசுந்தோட்டுப்
பொன்தாதுஆடிக் கற்றை நிலாப்
பொழியும் தரங்கம் பொறைஉயிர்த்த
பொன்போல் தொடுதோல்அடிப் பொலன்சூட்டு


இந்தப் பாற்குளத்தில் பொன் போல் சிவந்த கமலம் (தாமாரை) பூத்துள்ளது. அதன் இதழில், மகரந்தத் தாதுக்கள் பொடியாய் கண் சிமிட்டுகின்றன;
மேல் இருந்து பார்க்கிறான் சந்திரன். தன் பங்குக்கு மேலும் வெள்ளைக் கதிர்களை வீசுகிறான். Everything is white! நம்ம டிஸ்னி ட்ரீம்லேண்ட் போல!
இதனால் உண்டான அலையில், ஒரு வெள்ளை அன்னம், நீந்திச் செல்கிறது!
(தொடுதோல் அடி=அன்னத்தின் காலில் தோலும் ஒட்டி இருக்கும்; பொலன் சூட்டு=உச்சியில் கொண்டை; கவிஞர் இயற்கையை ரொம்பவே கவனிச்சு எழுதியிருப்பார் போல; காதலிலும் சரி, தாலாட்டிலும் சரி, கற்பனை பிச்சிக்கிட்டுப் போவது ஏனோ :-)


அன்னம் பொலியும் தமிழ்மதுரைக்கு
அரசே தாலோ தாலேலோ
அருள்சூல் கொண்ட அங்கயற்கண்
அமுதே தாலோ தாலேலோ


அன்னம் பொலியும் தமிழ் வளர்த்த மதுரை! அதை ஆள வந்த பெண்ணரசே, தாலே தாலேலோ! அங்கயற்கண்ணி = அம் கயல் கண்ணி; அழகிய கயல்மீன் கண்ணைக் கொண்டவளே! (மீனாக்ஷி = மீன+அக்ஷி = மீன்+கண்)
நீயே ஒரு குழந்தை; சூல்=கர்ப்பம்; குழந்தை சூல் கொள்ளுமா?

ஊரில் குழந்தையைக் கொஞ்சும் போது "என்னைப் பெத்த ராசா" என்று சொல்வார்கள்; குழந்தை எப்படி இவர்களைப் பெக்கும்? அதே தான் இதுவும்!!
உன்னைப் பெத்ததால் என் பிறவிக்கே ஒரு பொருள் வந்தது!
உன்னைப் பெற்றதால் என்னை நானே பெற்றவன் ஆனேன்!
அதனால் நீ "என்னைப் பெத்த ராசா"!!

அது போல் அன்பையும் அருளையும் சூல் கொண்டவளே!
என் அமுதமே மீனாட்சீ! என்னைப் பெற்ற தாயே!
தாலே தாலேலோ!!

(மேற்கண்ட பாடலை நீலாம்பரியில் இசைத்துப் பாடலாம்; கண்கள் தானாகவே சொக்கும்;
இது குமரகுருபரர் பாடிய மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்;
பிறவியில் வாய் பேச முடியாமல் பிறந்த அவர், பின்னர் திருச்செந்தூர் முருகன் அருளால் பேசும் திறம் பெற்றார். பேசும் திறம் மட்டுமா பெற்றார்?
நம்மை எல்லாம் பாட்டால் கட்டி,
நம்மைக் கட்டிக் காப்பவளையும் அல்லவா பாட்டால் கட்டும் திறம் பெற்றார்!)

எல்லாம் சரி! எதுக்குக் கடவுளைக் குழந்தை ஆக்கணும்? அதற்குப் பிள்ளைப் பாடல் பாடணும்??
ஜடாயு ஐயா அவர்கள் இந்தக் கேள்வி எழுப்பி உள்ளார், சென்ற பின்னூட்டத்தில்! ஆழமான அழகிய கேள்வி!! அடுத்த பதிவில் பார்ப்போம்!
ஆனா அதுக்கு முன்னாடி நம்ம "மருத"காரங்களுக்கு ஒரு கேள்வி! அன்னை மீனாட்சி பிறந்த ஊர் எது தெரியுமா?....

Monday, November 13, 2006

செந்தமிழா? பிள்ளைத்தமிழா??

செந்தமிழ் தெரியும்! அது என்ன பிள்ளைத்தமிழ்?
பிள்ளை போல் என்றும் இளமையாக இருப்பதால், தமிழ் மொழிக்கு இன்னொரு பேர், பிள்ளைத் தமிழா? இருக்கலாம்! :-)

கடவுளையோ அல்லது புகழ் பெற்ற மனிதரையோ குழந்தையாகப் பாவித்து(உருவகித்து) பாடப்படுவது "பிள்ளைத்தமிழ் என்று இலக்கியத்தில் அழைக்கிறார்கள்.

ஆண் குழந்தை, பெண் குழந்தை என்ற விருப்பு வெறுப்பு எல்லாம் தமிழுக்கும் கிடையாது! இறைவனுக்கும் கிடையாது!!
எந்தக் குழந்தை என்றாலும் சரி! நம்
சொந்தக் குழந்தை என்றாலும் சரி;
பிள்ளைத்தமிழ் பாடிக் கொள்ளலாம்! :-)

நாட்டுப்புறத்தில் "ஆராரோ, ஆரரிரோ, ஆர்அடிச்சு நீ அழுத" என்று பாடுவதற்குப் பிள்ளைத்தமிழ் என்று பெயர் வேண்டுமானால் இல்லாமல் இருக்கலாம்! ஆனால் சுவையைப் பொறுத்த மட்டில் அதுவும் பிள்ளைத்தமிழ் தானே!!

பின்னாளில் இதை சிற்றிலக்கிய வகையில் சேர்த்தார்கள்! அது ஏன் சிற்றிலக்கியம்? தெரியவில்லை!
ஒரு வேளை காவியம் போல் பெரிதாக இல்லாமல், அளவில் சிறிதாக இருப்பதால் இருக்கலாம்; "சிற்றின்பம்" தானே முதலில் சுவையுள்ளதாகத் தெரிகிறது! சிற்றிலக்கியமும் அப்படியே இருக்கட்டும்! :-)

குழந்தை வளர்வதைப் பத்து பருவங்களாகப் பிரித்து ஒவ்வொரு பருவத்துக்கும் ஒவ்வொரு பெயர், ஒவ்வொரு விளையாட்டு! கடைசிப் பருவங்களில் மட்டும் விளையாட்டுகள் சற்றே வேறுபடும்; ஆண் குழந்தைகள் சிறுபறை கொட்டினால், பெண் குழந்தைகள் அம்மானை விளையாடும்!

பல கவிஞர்கள் அப்போதும் சரி, இந்தக் காலத்திலும் சரி, பிள்ளைத்தமிழைப் பாடியுள்ளார்கள்! அண்மையில் யாரோ பிபாஷா பாசுவுக்குப் பாடப் போவதாக எங்கோ வலையில் படித்த ஞாபகம் :-)
ஆனால் பலர் போற்றிக் கொண்டாடுவது இவை தான்:

1) மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - குமரகுருபரர் எழுதியது
2) திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ் - பகழிக் கூத்தர்
3) சேக்கிழார் பிள்ளைத்தமிழ் - மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை

ஆனா இங்க ஒரு முக்கியமான விடயத்தைக் கவனிக்கனும்!
வடமொழியில் சுப்ரபாதம் என்ற ஒன்று உண்டு என்றால் தமிழில் திருப்பள்ளி எழுச்சி் என்ற ஒன்று உண்டு.
ஆனா, பாருங்க!
இந்தப் பிள்ளைத்தமிழ் என்பது தமிழில் தான் பெரும்பாலும் வழக்கில் உள்ளது! வடமொழியில் சில சுலோகங்கள் வேண்டுமானால் இருக்கலாம்; ஆனால் கவிதை அமைப்பாக இல்லை என்று தான் நினைக்கிறேன்!

இதன் முழுப்பெருமை யாரைச் சாரும் தெரியுமா?
பெரியாழ்வார் தான் அவர்!
தாலாட்டைக் கவிதையாக்கிய தமிழ்ச் சான்றோர் அவர்!
அவருக்கு முற்காலத்தில், இப்படிக் குழந்தை செய்யும் குறும்புகளை ரசித்து அனுபவிக்கும் கவிதைகள் அவ்வளவாக இல்லை! திருக்குறளில் கூட ஒரு அதிகாரம் மட்டுமே!


ஆனால் பெரியாழ்வார் ஒரு "புதுக்"கவிதை எழுதுகிறார் பாருங்கள்!
யசோதையாக தன்னைக் கற்பனை பண்ணிக் கொள்கிறார்;
கண்ணனின் குறும்புகள் எல்லாத்தையும் கண்டு களிக்க நமக்கு வழிவகை செய்கிறார். தாயான ஒரு பெண் கூட இப்படி லயித்து, அனுபவித்துக் குழந்தை வளர்க்க முடியுமா என்பது கேள்வியே!

தாலாட்டு, அம்புலி (நிலாச்சோறு),
சப்பாணி (கை கொட்டல்), பூச்சி காட்டுதல் (அட அப்பவே இது இருந்திருக்கு போல),
நீராட்டல், பூச்சூட்டல், மைபூசிக் காப்பிடல் என்று கிட்டத்தட்ட 200 கவிதைகள்;
இதோ சாம்பிளுக்கு ஒன்று! (இவர் பாடல்களுக்குக் கடைசியில் வருவோம்...)

மாணிக்கம் கட்டி மணிவைரம் இடைகட்டி
ஆணிப்பொன்னால் செய்த வண்ணச் சிறுத்தொட்டில்
பேணி உனக்குப் பிரமன்விடு தந்தான்
மாணிக் குறளனே தாலேலோ
வையம் அளந்தானே தாலேலோ

இதுல வேடிக்கை என்னவென்றால், பிள்ளைத்தமிழ் கவிதை முறையைத் தமிழுக்குக் கொண்டு வந்து சேர்த்தார். ஆனால் அவருடைய கவிதைகளே, பிள்ளைத்தமிழில் சேர்க்கப்படவில்லை!
அட நம்ம "வரம் தந்த சாமிக்குப் பதமான லாலி" பாட்டும், "அத்தை மடி மெத்தையடி" பாட்டும் பிள்ளைத்தமிழ் இல்லை தான்; அதுக்காக நாம பாடாமல் விட்டுடுவமா என்ன? :-))

அடுத்த பதிவில்,
குமரகுருபரர் எழுதிய மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்-இல் இருந்து ஒரு அருமையான பாடலைப் பார்ப்போம்!
சூரியனுக்கே டார்ச்லைட்டா? மதுரைக்கே மல்லிப்பூவா??
தாலாட்டு பாடும் அன்னைக்கே தாலாட்டா?? :-))
அன்னை மீனாளுக்கே அழகுத் தமிழா? நடக்கட்டும்! நடக்கட்டும்!!

முதல் வணக்கம்!

முதல் பிள்ளை! முதல் வணக்கம்!!முதல் பிள்ளை, என்றென்றும் நம் குட்டிப் பிள்ளையான கணபதியானுக்கு முதல் முத்தம் (வணக்கம்) சொல்லித் தொடங்குகிறேன்! :-)

இன்று நவம்பர் 14 - குழந்தைகள் தினம்!
குழந்தை அழுது கொண்டே தான் பிறக்கிறது; என்றாலும் வளரும் போது சில சமயம், சில வினாடிகள், நாம் குழந்தையைத் தேடும் படி ஆகி விடுகிறதே;
அப்போது நாம் தானே அழுது விடுகிறோம்! கலங்கிப் போய் விடுகிறோம்!!
மழலைச் "செல்வம்" என்று சும்மாவா சொன்னார்கள்?

குழல் இனிதா, யாழ் இனிதா.....
குழந்தைக் குரல் இனிதா...........இல்லை அதன்
எச்சில் விரல் இனிதா??

இட்டும் தொட்டும், கவ்வியும், நெய்யுடை உணவை மெய்ப்பட விதிர்த்தும்,
சிறு கை நீட்டிக் குறுகுறு நடந்தும்.......வடிக்க, வார்த்தைகள் தான் வந்திடுமோ?

இந்தப் வலைப்பூவில் பிள்ளைத்தமிழ் பாடல்கள் பலவற்றைச், சுவைக்கலாம் என்பது எண்ணம்! தேனினும் இனிய தீந்தமிழில், பலாச்சுளைப் பாப்பாவின் பாடல்கள் என்றால் சும்மாவா?
வழக்கம் போல் உங்கள் அன்பும் ஆதரவும் வேண்டித் துவங்குகிறேன்!

முன்னுரை

நண்பர்களே!
தமிழ்மணம் linkஐத் தவறுதலாக எடுத்துக் கொண்டது!
இதோ, இது தான் இப்போது பதிப்பித்த பதிவு!
நாட்டுப்புறத் தாலாட்டு: கொல்லையிலே தென்னை வச்சி, குருத்தோலைப் பெட்டி செஞ்சி...

பிள்ளைத் தமிழ் வலைப்பூ பல நாட்களாக இருந்தும்,
இதன் முதல் இடுகையைத் தமிழ்மணம் இப்போது எடுத்துக் கொண்டது ஏனோ! :-)
காப்பு!
விநாயக வணக்கம்!!

இந்தப் வலைப்பூவில் பிள்ளைத்தமிழ் பாடல்கள் பலவற்றைச், சுவைக்கலாம் என்பது எண்ணம்!
தேனினும் இனிய தீந்தமிழில், பலாச்சுளைப் பாப்பாவின் பாடல்கள் என்றால் சும்மாவா?
உங்கள் அன்பும் ஆதரவும் வேண்டித் துவங்குகிறேன்!

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP