செந்தமிழா? பிள்ளைத்தமிழா??
செந்தமிழ் தெரியும்! அது என்ன பிள்ளைத்தமிழ்?
பிள்ளை போல் என்றும் இளமையாக இருப்பதால், தமிழ் மொழிக்கு இன்னொரு பேர், பிள்ளைத் தமிழா? இருக்கலாம்! :-)
கடவுளையோ அல்லது புகழ் பெற்ற மனிதரையோ குழந்தையாகப் பாவித்து(உருவகித்து) பாடப்படுவது "பிள்ளைத்தமிழ் என்று இலக்கியத்தில் அழைக்கிறார்கள்.
ஆண் குழந்தை, பெண் குழந்தை என்ற விருப்பு வெறுப்பு எல்லாம் தமிழுக்கும் கிடையாது! இறைவனுக்கும் கிடையாது!!
எந்தக் குழந்தை என்றாலும் சரி! நம்
சொந்தக் குழந்தை என்றாலும் சரி;
பிள்ளைத்தமிழ் பாடிக் கொள்ளலாம்! :-)
நாட்டுப்புறத்தில் "ஆராரோ, ஆரரிரோ, ஆர்அடிச்சு நீ அழுத" என்று பாடுவதற்குப் பிள்ளைத்தமிழ் என்று பெயர் வேண்டுமானால் இல்லாமல் இருக்கலாம்! ஆனால் சுவையைப் பொறுத்த மட்டில் அதுவும் பிள்ளைத்தமிழ் தானே!!
பின்னாளில் இதை சிற்றிலக்கிய வகையில் சேர்த்தார்கள்! அது ஏன் சிற்றிலக்கியம்? தெரியவில்லை!
ஒரு வேளை காவியம் போல் பெரிதாக இல்லாமல், அளவில் சிறிதாக இருப்பதால் இருக்கலாம்; "சிற்றின்பம்" தானே முதலில் சுவையுள்ளதாகத் தெரிகிறது! சிற்றிலக்கியமும் அப்படியே இருக்கட்டும்! :-)
குழந்தை வளர்வதைப் பத்து பருவங்களாகப் பிரித்து ஒவ்வொரு பருவத்துக்கும் ஒவ்வொரு பெயர், ஒவ்வொரு விளையாட்டு! கடைசிப் பருவங்களில் மட்டும் விளையாட்டுகள் சற்றே வேறுபடும்; ஆண் குழந்தைகள் சிறுபறை கொட்டினால், பெண் குழந்தைகள் அம்மானை விளையாடும்!
பல கவிஞர்கள் அப்போதும் சரி, இந்தக் காலத்திலும் சரி, பிள்ளைத்தமிழைப் பாடியுள்ளார்கள்! அண்மையில் யாரோ பிபாஷா பாசுவுக்குப் பாடப் போவதாக எங்கோ வலையில் படித்த ஞாபகம் :-)
ஆனால் பலர் போற்றிக் கொண்டாடுவது இவை தான்:
1) மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - குமரகுருபரர் எழுதியது
2) திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ் - பகழிக் கூத்தர்
3) சேக்கிழார் பிள்ளைத்தமிழ் - மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை
ஆனா இங்க ஒரு முக்கியமான விடயத்தைக் கவனிக்கனும்!
வடமொழியில் சுப்ரபாதம் என்ற ஒன்று உண்டு என்றால் தமிழில் திருப்பள்ளி எழுச்சி் என்ற ஒன்று உண்டு.
ஆனா, பாருங்க!
இந்தப் பிள்ளைத்தமிழ் என்பது தமிழில் தான் பெரும்பாலும் வழக்கில் உள்ளது! வடமொழியில் சில சுலோகங்கள் வேண்டுமானால் இருக்கலாம்; ஆனால் கவிதை அமைப்பாக இல்லை என்று தான் நினைக்கிறேன்!
இதன் முழுப்பெருமை யாரைச் சாரும் தெரியுமா?
பெரியாழ்வார் தான் அவர்!
தாலாட்டைக் கவிதையாக்கிய தமிழ்ச் சான்றோர் அவர்!
அவருக்கு முற்காலத்தில், இப்படிக் குழந்தை செய்யும் குறும்புகளை ரசித்து அனுபவிக்கும் கவிதைகள் அவ்வளவாக இல்லை! திருக்குறளில் கூட ஒரு அதிகாரம் மட்டுமே!
ஆனால் பெரியாழ்வார் ஒரு "புதுக்"கவிதை எழுதுகிறார் பாருங்கள்!
யசோதையாக தன்னைக் கற்பனை பண்ணிக் கொள்கிறார்;
கண்ணனின் குறும்புகள் எல்லாத்தையும் கண்டு களிக்க நமக்கு வழிவகை செய்கிறார். தாயான ஒரு பெண் கூட இப்படி லயித்து, அனுபவித்துக் குழந்தை வளர்க்க முடியுமா என்பது கேள்வியே!
தாலாட்டு, அம்புலி (நிலாச்சோறு),
சப்பாணி (கை கொட்டல்), பூச்சி காட்டுதல் (அட அப்பவே இது இருந்திருக்கு போல),
நீராட்டல், பூச்சூட்டல், மைபூசிக் காப்பிடல் என்று கிட்டத்தட்ட 200 கவிதைகள்;
இதோ சாம்பிளுக்கு ஒன்று! (இவர் பாடல்களுக்குக் கடைசியில் வருவோம்...)
மாணிக்கம் கட்டி மணிவைரம் இடைகட்டி
ஆணிப்பொன்னால் செய்த வண்ணச் சிறுத்தொட்டில்
பேணி உனக்குப் பிரமன்விடு தந்தான்
மாணிக் குறளனே தாலேலோ
வையம் அளந்தானே தாலேலோ
இதுல வேடிக்கை என்னவென்றால், பிள்ளைத்தமிழ் கவிதை முறையைத் தமிழுக்குக் கொண்டு வந்து சேர்த்தார். ஆனால் அவருடைய கவிதைகளே, பிள்ளைத்தமிழில் சேர்க்கப்படவில்லை!
அட நம்ம "வரம் தந்த சாமிக்குப் பதமான லாலி" பாட்டும், "அத்தை மடி மெத்தையடி" பாட்டும் பிள்ளைத்தமிழ் இல்லை தான்; அதுக்காக நாம பாடாமல் விட்டுடுவமா என்ன? :-))
அடுத்த பதிவில்,
குமரகுருபரர் எழுதிய மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்-இல் இருந்து ஒரு அருமையான பாடலைப் பார்ப்போம்!
சூரியனுக்கே டார்ச்லைட்டா? மதுரைக்கே மல்லிப்பூவா??
தாலாட்டு பாடும் அன்னைக்கே தாலாட்டா?? :-))
அன்னை மீனாளுக்கே அழகுத் தமிழா? நடக்கட்டும்! நடக்கட்டும்!!
25 comments:
பிள்ளைத்தமிழ் பாக்கள் கண்ணதாசன் கூட சிறுகூடற்பட்டி விசாலாட்சி அம்மனுக்காக எழுதி இருக்கிறார். அவருடைய திரைப்பட பாடல்களில் இருந்து மாறுபட்டு இருக்கும்.
குமர குருபரருடைய பாடல்களை மீண்டும் படிக்க வாய்ய்பு தந்தமைக்கு நன்றி
கண்ணபிரானே. பிள்ளைத்தமிழை உங்கள் பார்வையில் கேட்கவேண்டும் படிக்கவேண்டும். முதல்லே வந்தேனே பரிசு உண்டா?
பத்மா, வாங்க!
குழந்தைகள் பற்றிய வலைப்பூவிற்கு, உங்களிடம் இருந்து முதல் பின்னூட்டம் வந்தது எனக்கு மிக்க மகிழ்ச்சி!
நீங்க சொன்னது போல், கண்ணதாசன், கவிமணி, என்று இக்காலக் கவிஞர்களின் எளிய இனிய கவிதைகளையும், நாட்டுப்புறப் பாடல்களையும் இதில் நிச்சயம் இடப் போகிறேன்! அதுவும் நாட்டுப் பாடல்கள் ஸ்பெஷல்!! :-)
பத்மா ஜி
அப்புறம் இன்னொரு விடயம்;
கவிதைகளுக்கு நடுவில், அக்காலக் குழந்தை வளர்ப்பு, அவர்களின் நடை, உடை, பாவனைகள், விளையாட்டுக்கள் எல்லாம் இடையிடையே பேசவும் எண்ணம்!
ஐயம் ஏற்பட்டால், நிச்சயம் தங்கள் உதவியைக் கோருவேன் என்று அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் :-))
//தி. ரா. ச.(T.R.C.) said...
கண்ணபிரானே. பிள்ளைத்தமிழை உங்கள் பார்வையில் கேட்கவேண்டும் படிக்கவேண்டும். முதல்லே வந்தேனே பரிசு உண்டா?//
வாங்க திராச! நலமா? சென்னை மழை எப்படி?
"கெளசிகமே" எனக்குப் பெரிய பரிசு!
உங்களுக்கே பரிசா?
சரி! திராச ஐயா எதை விரும்புவார்? அதைப் பரிசாத் தரலாம்ன்னு யோசிச்சா....
அட, நம்ம தியாகராஜ கீர்த்தனைகள்; அதுவும் சிவன்,அம்பாள்,முருகன் ஆன சோமாஸ்கந்தன் மேல்! :-))
கூடிய விரைவில்!!!
மதுரைக்கே மல்லியா? எந்த மல்லியை சொல்றீங்க? :-) எனக்குத் தெரிஞ்சு மதுரை மல்லி ஒருத்தர் இருக்கார். உங்களுக்கும் தெரிஞ்சிருக்கும்.
என் மகளுக்குத் தாலாட்டாய் வழக்கமாய் திருப்பாவை பாடல்கள் (அதுவும் தோழியரை எழுப்பும் பாடல்கள்) தான் பாடுவது வழக்கம் என்றாலும் அவ்வப்போது மாணிக்கம் கட்டியும் பாடியிருக்கிறேன். திருப்பாவையில் இரண்டு மூன்று பாக்கள் பாடவேண்டும்; ஆனால் இந்த மாணிக்கம் கட்டியில் மட்டும் 'வையம் அளந்தானே தாலேலோ' வரும் போது எங்கள் அன்னை தூங்கியிருப்பாள். :-) கோளறு பதிகம் பொருள் எழுதும் போது அதனையும் பாடியிருக்கிறேன். இப்போது தான் தோன்றுகிறது. இன்னும் திருநீற்றுப் பதிகம் பாடவில்லையே என்று. இன்றைக்கு முயலவேண்டியது தான். :-)
//குமரன் (Kumaran) said...
மதுரைக்கே மல்லியா? எந்த மல்லியை சொல்றீங்க? :-) எனக்குத் தெரிஞ்சு மதுரை மல்லி ஒருத்தர் இருக்கார்//
குமரன் :-))))
நீங்க இதைக் கட்டாயம் கேக்கப் போறீங்கன்னு தெரிந்தே, அந்த வரியைக் கடைசியில் add on செய்தேன்! நீங்களும் அப்படியே கேட்டீங்க பாருங்க!
யத் பாவம் தத்வமஸி :-)
மக்கள்ஸ்,
நம்ம குமரனார் சொல்வது புரிகிறதா?
அவரிடம் "மல்லி" உண்டு!
அதான் மதுரைக்கே மல்லியா-ன்னு கேக்காரு! நான் என்னத்தைச் சொல்ல? Help please :-))
//தாலாட்டாய் வழக்கமாய் அதுவும் தோழியரை எழுப்பும் பாடல்கள் தான் பாடுவது வழக்கம்//
தூங்க வைக்க, எழுப்பும் பாட்டு பாடறீங்களோ? என்ன சொல்வேன் உங்க திருவிளையாட்டை? :-)
தேசுடைய உங்கள் புதல்வி, வளர்ந்ததும் உங்களை இதை வச்சே மடக்கப் போறாங்க பாருங்க! :-))
யத் பாவம் தத் பவதி யா? தத்வமஸி யா?
//யத் பாவம் தத் பவதி யா? தத்வமஸி யா?//
"யத் பாவம் தத் பவதி", தான் குமரன் சரியான வாசகம்!
சுட்டிக் காட்டியமைக்கு நன்றி!
நான் தான் கொஞ்சம் உல்டா பண்ணிவிட்டேன்!
மல்லி குறித்துப் பேசும் போது "நீங்க தான் அது" என்று சொல்ல வந்தேன்!
அதற்கு "தத்வமஸி" யை எடுத்துக் கொண்டேன்!
"நானும் எழுதும் போது அதையே நினைத்தேன்" என்று சொல்வதற்கு, "யத் பாவம்" எடுத்துக் கொண்டேன்!
உல்டா செய்த வால் பையனை, மன்னியுங்கள் பிழை இருந்தால்! :-)
பிள்ளைத் தமிழ். சிற்றிலியக்கம் என்றாலும் குழந்தைகளுக்கானது என்பதாலேயே பேரிலக்கியம். ஆண்டவனையே குழந்தையாக்கித் தாயாய்ப் பாடி வளர்க்கும் பிள்ளைத் தமிழுக்கு இணை பிள்ளைத் தமிழே!
குமரகுருபரரைப் பற்றிச் சொல்ல வேண்டுமா! செந்திலாண்டவன் அருளால் பேசும் திறமை பெற்று பேச்சோடு மூச்சும் தமிழாய்த் தோன்றி கந்தர் கலிவெண்பா கொடுத்த ஞானக்குழந்தை அவர். "பூமேவு செங்கமலப் புத்தேளும்" என்று முருகன் காட்டிய பூவை வைத்தே பாவைத் துவக்கியவர். அவர் அருளிய மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் வரக் காத்திருக்கிறேன்.
வண்டாற் குழற்கண்ணி
மலையத்துவசன் பெற்ற
மாமதுரை இளங்குயிலே வருகவே
தண்ணாறும் மரகதப் பூமேனியைத்
தென்றலில் தாலாட்டும் சீமாட்டி வருகவே
தடங்கண்கள் இமையாதே
தனையனைக் காத்தருள்
தவத்தின் தவப்பயனே வருகவே வருகவே!
இரண்டு நாட்களாக நான் நினைத்துக் கொண்டிருந்த அடியார் பகழிக் கூத்தர். அவரை வைத்துக் கதை சொல்ல உள்ளத்தில் அத்தனை கற்பனை. இங்கு வந்தால் அவரே. முருகன் எண்ணம் அதுதான் போலும். விரைவில் கதையில் கொண்டு வர முயல்கிறேன்.
எங்கே என் பின்னூட்டம்? அன்றைக்கே கவிதையாய் எழுதி அனுப்பி வாழ்த்தி இருந்தேனே?
ஷைலஜா
//G.Ragavan said...
பிள்ளைத் தமிழ். சிற்றிலியக்கம் என்றாலும் குழந்தைகளுக்கானது என்பதாலேயே பேரிலக்கியம்.//
தமிழ் ஆசான் இப்படி வந்து இலக்கணத்தை மாற்ற வேண்டும் என்பதே என் அவா:-)
நன்றி ஜிரா பேரிலக்கியம் என்று மாற்றியமைக்கு!
//தனையனைக் காத்தருள்
தவத்தின் தவப்பயனே வருகவே வருகவே!//
வருகைப் பருவத்தின் முன்னோட்டத்தை ஜிரா அழகாய்ச் சொல்லி விட்டார் பாருங்க!
//இரண்டு நாட்களாக நான் நினைத்துக் கொண்டிருந்த அடியார் பகழிக் கூத்தர். அவரை வைத்துக் கதை சொல்ல உள்ளத்தில் அத்தனை கற்பனை. இங்கு வந்தால் அவரே. முருகன் எண்ணம் அதுதான் போலும். விரைவில் கதையில் கொண்டு வர முயல்கிறேன்//
பகழிக் கூத்தர் கதையா?
ஜிரா முதல் ஆளாய் நான் ஓடி வருகிறேன்! அலை கடல் கொஞ்சும் செந்தூரை, தமிழ்க் கடல் கொஞ்சும் செந்தூர் ஆக்கியவர் அல்லவா!
//ஷைலஜா said...
எங்கே என் பின்னூட்டம்?//
:-)
ஷைலஜா, வாங்க!
நீங்க பின்னூட்டத்தை முன்னூட்டத்தில் (முன்னுரையில்) இட்டு இருந்தீங்க!
சரி, அந்தப் பதிவில் இட்டதை, இதோ இங்கும் இடுகிறேன்!
எல்லாம் தங்கள் ஆணை! :-)
இதோ:
//ஷைலஜா said...
வற்றா கங்கை வெள்ளமென
மதுரத் தமிழில் விருந்தளிக்க
பற்றால் சுற்றம் அனைவரையும்
பரிவுடன் அழைக்கும் ரவிசங்கர்!
உற்றோமே ஆனோம், உவகையுடன்
ஓடிவந்தோம்
மற்றேது பணி காண்போம்
பிள்ளைத்தமிழ்மட்டும்போதுமே!//
ஆகா, பதிவில் கவிதை கண்டுள்ளேன்; பின்னூட்டத்திலே அழகிய கவிதையா! அதுவும் கொஞ்சு தமிழில் மரபுக் கவிதை;
அமர்க்களம் போங்கள்!
மிக்க நன்றி ஷைலஜா!
//உற்றோமே ஆனோம், உவகையுடன்
ஓடிவந்தோம்//
திருப்பாவை வரிகள் தங்கள் கைவண்ணத்தில் தித்திக்கின்றன!!
கண்ணபிரான்
நேற்று வீடு திரும்பும் வேளை ஒரு குழந்தையும் தாயும் விளையாடிக்கொண்டிருந்தார்கள் மின்சார ரயில் உள்ளே.குழந்தை அம்மாவுக்கு ஒரு முத்தா உடனே அம்மா ஏதோ சிலிர்த்தமாதிரி சீனத்தில் சொல்ல அந்த குழந்தை "அஞ்சலி" படத்தில் குழந்தை சிரிக்குமே அந்த மாதிரி சிரித்தது.இது பல முறை நடந்தது.பார்க்க கண் கோடி வேண்டும்.குழந்தைகள் நடவடிக்கயே தனி உலகம்.
வெளியில் போனால் நான் அதிகமாக கவனிப்பது குழந்தைகளை தான்.
பிள்ளைத் தமிழும் செந்தமிழில் அடக்கம் தானே.....
நடக்கட்டும் உன் பணி, கொட்டடும் தமிழ் மழை.
//வடுவூர் குமார் said...
கண்ணபிரான்
அம்மாவுக்கு ஒரு முத்தா உடனே அம்மா ஏதோ சிலிர்த்தமாதிரி சீனத்தில் சொல்ல அந்த குழந்தை "அஞ்சலி" படத்தில் குழந்தை சிரிக்குமே அந்த மாதிரி சிரித்தது.....வெளியில் போனால் நான் அதிகமாக கவனிப்பது குழந்தைகளை தான்//
சரியாச் சொன்னீங்க குமார் சார்!
இப்பல்லாம் எனக்கும் நீங்க சொன்னா மாதிரி தான்; வெளியில் போனால் எதிரே வரும் சிறார்களைத் தான் கவனிக்கத் தோணுது! அதுவும் stroller-இல் ஹி ஹி என்று வெளியில் எட்டிப் பாத்துக் கொண்டே வரும் குட்டி முகம்....:-)))
//நாகை சிவா said...
பிள்ளைத் தமிழும் செந்தமிழில் அடக்கம் தானே.....
நடக்கட்டும் உன் பணி, கொட்டடும் தமிழ் மழை//
தங்கள் அன்புக்கும் ஊக்கத்துக்கும் மிக்க நன்றி சிவா!!
பராட்டுகள், நன்றிகள், வாழ்த்துகள்!
பிள்ளைத்தமிழ் எம்ஜியார், அண்ணாதுரை மேலெல்லாம் பாடியிருக்கிறார்கள்.
பெரியாழ்வார் பாடலை ஏன் புதுக்கவிதை என்று சொல்கிறீர்கள்?
பிள்ளைத் தமிழைப் பிழிந்து தரவந்த
பிள்ளைரவி சங்கரேவாழ் க!
//ஓகை said...
பிள்ளைத்தமிழ் எம்ஜியார், அண்ணாதுரை மேலெல்லாம் பாடியிருக்கிறார்கள்.//
வாங்க ஓகை ஐயா
உண்மை தான்; அதாச்சும் பரவாயில்லை! குஷ்பு, பிபாஷா பாசு இதெல்லாம் டூ டூ மச்!
//பெரியாழ்வார் பாடலை ஏன் புதுக்கவிதை என்று சொல்கிறீர்கள்?//
பிள்ளைத் தமிழ் என்ற ஒரு முறையே வகுக்கக்படாத காலகட்டத்தில், பாட்டுடைத் தலைவன் வீரம்/தலைவி மாண்பு இவை பற்றிய ஒன்றை மீறி, அவர் கொண்டு வந்ததால், அப்படிச் சொன்னேன் சார்! அவர் கவிதை அந்தக் காலத்துக்கு "புது" மரபுக் கவிதை தானே!:-)
//பிள்ளைத் தமிழைப் பிழிந்து தரவந்த
பிள்ளைரவி சங்கரேவாழ் க!//
அடடா
இந்தப் பிள்ளையின் மேல் அன்பு கொண்டு கவிதை தந்த ஓகை ஐயாவிற்கு என் நன்றியும் அன்பும்!
அட்டகாசமான ஆரம்பம். (ஆ ரம்பம் என அறுத்துப் படித்தீரானால் அது உம் தவறு!)
கண்ணபிரான்,
பிள்ளைத் தமிழ் பற்றி எழுத உங்களை விடப் பொருத்தமான ஆள் வேறு யார் இருக்க முடியும்? ஆன்மிகப் பணி தொடர வாழ்த்துக்கள்.
பிள்ளைத் தமிழ் மற்றும் வாத்சல்ய பாவம் என்பதன் பின் உள்ள ஆன்ம உளவியல் (spiritual psychology) பற்றியும் நீங்கள் இதில் விளக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இந்து மதத்தில் சாதாரணமாகத் தோன்றும் ஆழமான விஷயம் இது.
இறையைக் குழந்தை என்று காணும்போது ஏற்படும் உணர்வுகள் மிக அலாதியானவை. கணவன் மனைவி பந்தத்தை விடவும் தீவிரமான, முழுமையான தன்னல மறுப்பு அங்கே சாத்தியம். சொர்க்கம், நரகம், சாத்தான், நம்பிக்கையாளர்கள், நம்பாதவர்கள் போன்ற சமயத்தின் கசடுகள் எல்லாம் ஒழியும் இடம் வாத்சல்ய பாவம். இந்த aspect பற்றியும் எழுதுங்கள்.
//இலவசக்கொத்தனார் said...
அட்டகாசமான ஆரம்பம். (ஆ ரம்பம் என அறுத்துப் படித்தீரானால் அது உம் தவறு!)!//
வருக கொத்ஸ் ஐயா
நான் "ஆரம் பம்" என்று படித்துக் கொள்ளலாமா? :-)
ஆரம்=மாலை :-))
//ஜடாயு said...
கண்ணபிரான்,
பிள்ளைத் தமிழ் பற்றி எழுத உங்களை விடப் பொருத்தமான ஆள் வேறு யார் இருக்க முடியும்? ஆன்மிகப் பணி தொடர வாழ்த்துக்கள்.//
நன்றி ஜடாயு ஐயா!
//வாத்சல்ய பாவம் என்பதன் பின் உள்ள ஆன்ம உளவியல் (spiritual psychology) பற்றியும் நீங்கள் இதில் விளக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இந்து மதத்தில் சாதாரணமாகத் தோன்றும் ஆழமான விஷயம் இது//
அருமையா எடுத்துக் கொடுத்திருக்கீங்க!
நிச்சயம் செய்கிறேன்!
வெளியில் சாதாரணமாகத் தோன்றினாலும் உள்ளே எவ்வளவு பெரும் தத்துவம்; தன்னல மறுப்பு!
உங்கள் நாயகி பாவம் பற்றிய பதிவும் அடியேனுக்கு கை கொடுக்கும்!
கே.ஆர்.எஸ்,
இந்த பதிவு ஒரு தாலாட்டு ! இனிமை !
நன்றி !
"கண்ணன் ஒரு கை குழந்தை"
:)
//கோவி.கண்ணன் [GK] said...
கே.ஆர்.எஸ்,
இந்த பதிவு ஒரு தாலாட்டு ! இனிமை !//
நன்றி GK ஐயா!
//"கண்ணன் ஒரு கை குழந்தை"//
ஆமாங்க GK!
கோவி. கண்ணன் ஒரு கை குழந்தை தான்! :-)
படத்தில் பார்த்தோமே! கொஞ்சும் சிரிப்பு!:-)))))
Post a Comment