அன்னை மீனாட்சிக்கு ஒரு தாலேலோ!!
மதுரை என்ற சொன்ன அடுத்த நிமிடம் எல்லாருக்கும் உடனே நினைவுக்கு வருவது எது?
ஆண்-பெண், சாதி-மதம், நாடு-மொழி, ஆத்திகம்-நாத்திகம் என்று எல்லாத்துக்கும் அப்பாற்பட்டு உடனே மனதில் தோன்றுவது எது?
ஒளிக்காமல், மறைக்காமல் சொல்லுங்க பார்ப்போம்!..ஆங்! அதே!
மீனாட்சி!!!
அது எப்படி அம்மா இது?
ஊரைச் சொன்ன மாத்திரத்தில் அனைவர் உள்ளங்களிலும் சிக்கென்று நிறைந்து விடுகிறாய்?
இதே சென்னை, திருச்சி என்று பெரிய பெரிய ஊர்களைச் சொன்னால் எல்லாருக்கும் கபாலியோ இல்லை அரங்கனோ மனதில் வருவது இல்லை!
ஒரே விதிவிலக்கு திருப்பதி! அங்கும் பேரைச் சொன்னாலே போதும் வேங்கடவன் வந்து விடுகிறான்; இப்படி அண்ணனும் தங்கையும் இந்த வித்தையை எங்கிருந்து தான் கற்றுக் கொண்டீர்களோ? :-)
சரி, இப்போ மதுரைக்குச் சற்று வெளியில் உள்ள ஒரு பெரிய குளத்துக்குப் போகலாம் வாங்க! வண்டியூர் மாரியம்மன் குளம்!
கூட்டாஞ்சோறு சாப்பிட இதை விட ஒரு நல்ல இடம் கிடைக்குமா? மரங்கள் சூழ்ந்து, சிலு சிலு என்று பசுமையான குளம்!
குளத்தில் தண்ணியே இல்லை! ஒரே பாலா இருக்கு! ஆவின் பால்!!
பசுங்குளம், வெள்ளைக்குளமா மாறிடுச்சா?? இது என்ன ஏதாச்சும் கண்கட்டு வித்தையா?
குமரகுருபரர் என்ற செந்தமிழ்க் கவிஞர் செய்யும் வித்தை இது! எதுக்கு? குழந்தை மீனாளை/அன்னை மீனாளைத் தூங்க வைக்க! பார்க்கலாம் வாங்க!
தென்னன் தமிழின் உடன்பிறந்த
சிறுகால் அரும்பத் தீஅரும்பும்
தேமா நிழற்கண் துஞ்சும்இளஞ்
செங்கண் கயவாய்ப் புனிற்றுஎருமை
நம்ம தமிழும், தென்றல் காற்றும் உடன் பிறப்புக்கள். இரண்டும் ஒரே தெற்குத் திசை மலை - பொதிகை மலையில் தான் தோன்றின!
அகத்தியர் மலை அல்லவா அது! தெற்கில் இருந்து வீசுவதால் தானே தென்றல்ன்னு பேரு! சிறுகால் = தென்றல்; குட்டிப் பாப்பாவின் சிறு கால் போல தென்றல் தத்தித் தத்தி வீசுகிறதே!
இப்படித் தென்றல் வீச, குளக்கரை மாமரங்களின் மேல் தீ ஜ்வாலை பற்றி எரிகிறது! அடச் சும்மாங்க! மாந்தளிர் சிவந்து இருப்பதால், காற்றில் பறபற என்று ஆடிஆடித், தீ அரும்புவது போல் உள்ளதாம்!
அந்த மர நிழலில் ஒரு மாடு தூங்குகிறது; எருமை மாடு;
இந்தக் காலத்தில் தான் எருமை என்றால் நாமெல்லாம், அதுவும் பட்டிணத்துக்காரங்க, ஒரு மாதிரியா பார்க்கிறோம்! ஆனா அதுவும் பால் தரும் ஜீவன் தானே! சிவந்த கண், பெரிய வாய், இப்போது தான் கன்னு போட்ட (புனிற்று) ஒரு தாய் எருமை!
இன்னம் பசும்புல் கறிக்கல்லா
இளங்கன்றுஉள்ளி மடித்தலம் நின்று
இழிபால் அருவி உவட்டுஎறிய
எறியும் திரைத்தீம் புனல்பொய்கைப்
இன்னும் பச்சைப் புல்லைக் கூடக் கடிக்க முடியாமல் உள்ள பச்சிளங் கன்றைப் பார்த்தவுடன், அம்மா எருமைக்கு ஒரே பாசம்.
தானாகவே பால் மடியில் இருந்து சுரக்கிறது. இந்தக் குட்டி என் வயிற்றில் வந்து பிறந்து, சாப்பிடக் கூடத் தெரியாமல் இருக்குதே என்ற ஏக்கம், பாலாகத் தானாய்ச் சுரக்கிறது!
சுப்ரபாதப் பதிவிலும் இதைப் பார்த்தோம். அன்னையிடம் நாமெல்லாம் போவதற்கு முன்பே, நமக்கு என்ன தரலாம் என்று தாயாய் அருள் சுரக்கின்றாள்!
இப்படிப் பால் வழிந்து அருவி போல ஓடுகிறது!
பொய்கையில் (குளம்) உள்ள தண்ணீர் அலைகள் இந்தப் புது பால் அருவியோடு மோதுகின்றன!
பாலும் நீரும் மோதி மோதிக், கடைசியில் குளம் முழுக்க பால்! பாற்கடலோ, பாற்குளமோ என்று நிறைந்து விடுகிறது!
பொன்னம் கமலப் பசுந்தோட்டுப்
பொன்தாதுஆடிக் கற்றை நிலாப்
பொழியும் தரங்கம் பொறைஉயிர்த்த
பொன்போல் தொடுதோல்அடிப் பொலன்சூட்டு
இந்தப் பாற்குளத்தில் பொன் போல் சிவந்த கமலம் (தாமாரை) பூத்துள்ளது. அதன் இதழில், மகரந்தத் தாதுக்கள் பொடியாய் கண் சிமிட்டுகின்றன;
மேல் இருந்து பார்க்கிறான் சந்திரன். தன் பங்குக்கு மேலும் வெள்ளைக் கதிர்களை வீசுகிறான். Everything is white! நம்ம டிஸ்னி ட்ரீம்லேண்ட் போல!
இதனால் உண்டான அலையில், ஒரு வெள்ளை அன்னம், நீந்திச் செல்கிறது!
(தொடுதோல் அடி=அன்னத்தின் காலில் தோலும் ஒட்டி இருக்கும்; பொலன் சூட்டு=உச்சியில் கொண்டை; கவிஞர் இயற்கையை ரொம்பவே கவனிச்சு எழுதியிருப்பார் போல; காதலிலும் சரி, தாலாட்டிலும் சரி, கற்பனை பிச்சிக்கிட்டுப் போவது ஏனோ :-)
அன்னம் பொலியும் தமிழ்மதுரைக்கு
அரசே தாலோ தாலேலோ
அருள்சூல் கொண்ட அங்கயற்கண்
அமுதே தாலோ தாலேலோ
அன்னம் பொலியும் தமிழ் வளர்த்த மதுரை! அதை ஆள வந்த பெண்ணரசே, தாலே தாலேலோ! அங்கயற்கண்ணி = அம் கயல் கண்ணி; அழகிய கயல்மீன் கண்ணைக் கொண்டவளே! (மீனாக்ஷி = மீன+அக்ஷி = மீன்+கண்)
நீயே ஒரு குழந்தை; சூல்=கர்ப்பம்; குழந்தை சூல் கொள்ளுமா?
ஊரில் குழந்தையைக் கொஞ்சும் போது "என்னைப் பெத்த ராசா" என்று சொல்வார்கள்; குழந்தை எப்படி இவர்களைப் பெக்கும்? அதே தான் இதுவும்!!
உன்னைப் பெத்ததால் என் பிறவிக்கே ஒரு பொருள் வந்தது!
உன்னைப் பெற்றதால் என்னை நானே பெற்றவன் ஆனேன்!
அதனால் நீ "என்னைப் பெத்த ராசா"!!
அது போல் அன்பையும் அருளையும் சூல் கொண்டவளே!
என் அமுதமே மீனாட்சீ! என்னைப் பெற்ற தாயே!
தாலே தாலேலோ!!
(மேற்கண்ட பாடலை நீலாம்பரியில் இசைத்துப் பாடலாம்; கண்கள் தானாகவே சொக்கும்;
இது குமரகுருபரர் பாடிய மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்;
பிறவியில் வாய் பேச முடியாமல் பிறந்த அவர், பின்னர் திருச்செந்தூர் முருகன் அருளால் பேசும் திறம் பெற்றார். பேசும் திறம் மட்டுமா பெற்றார்?
நம்மை எல்லாம் பாட்டால் கட்டி,
நம்மைக் கட்டிக் காப்பவளையும் அல்லவா பாட்டால் கட்டும் திறம் பெற்றார்!)
எல்லாம் சரி! எதுக்குக் கடவுளைக் குழந்தை ஆக்கணும்? அதற்குப் பிள்ளைப் பாடல் பாடணும்??
ஜடாயு ஐயா அவர்கள் இந்தக் கேள்வி எழுப்பி உள்ளார், சென்ற பின்னூட்டத்தில்! ஆழமான அழகிய கேள்வி!! அடுத்த பதிவில் பார்ப்போம்!
ஆனா அதுக்கு முன்னாடி நம்ம "மருத"காரங்களுக்கு ஒரு கேள்வி! அன்னை மீனாட்சி பிறந்த ஊர் எது தெரியுமா?....
59 comments:
எங்கேர்ந்துதான் இப்படி அழகு, அழகான படங்கள் எடுக்குறீங்களோ! மீனாட்சி கொள்ளை அழகு. அவள் நாராயிணிதானே பின்னே எப்படி இருப்பாள்! இவள் வைஷ்ணவ தேவி என்பது ஐதீகம். அதான் திருப்பதி, மதுரை ரெண்டு பேரைச் சொன்னாலும் உடனே ஞாபகத்துக்கு வராங்க.
இந்த அன்னை மடியில் தவழ்ந்த குழந்தை நான். அட! ஞானசம்பந்தர்ன்னு சொல்ல வரலை. குழந்தையிலே ஆடி வீதியிலேதான் விளையாண்டுக்கிட்டு இருப்பேன்.
எப்படிப் புகழ்வது?
எதனைப் போற்றுவது?
அன்னை மீனாளின் அழகு பிள்ளைத் தமிழ்!
அதற்கு அருமையான விளக்கம்!
சிதம்பரம் என்றால் ஆடலரசனும்,
பழனி என்றால் முருகனும் நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை!
மிக்க நன்றி, ரவி!
இன்னும் மதுரை மீனாட்சியை தரிசிக்க கொடுத்துவைக்கவில்லை.
4 வரி போட்டு அதற்கு விளக்கம் கொடுத்தது மிக அழகாக இருந்தது.
தொடருங்கள் உங்கள் நற்பணியை.
மிகச் சிறப்பாக எளிதாக விளக்கியிருக்கிறீர்கள் இரவிசங்கர். அம்மையின் பிள்ளைத்தமிழை இப்போது தான் முதன் முதலில் படிக்கிறேன். மிக்க நன்றி.
அன்னை பிறந்த ஊர் மணலூரா?
ரவி,
மிக நன்றாக எழுதுகிறீர்கள். ப்ரம்மோற்சவமும், சுப்ரபாதமும் தொகுப்பாக இருக்கிறதா? புத்தகமாக வெளியிட எண்ணியுள்ளீர்களா?
குமரன் அவர்களே,
மீனாட்சி பிறந்தது, மதுரைக் கோவிலில் உள்ள பொற்றாமரைக் குளத்தில் என்றுதான் நினைத்திருந்தேன். 'மனலூர்' என்று சொல்லுகின்றீர்களே?
//இவள் வைஷ்ணவ தேவி என்பது ஐதீகம//
கண்ணன் ஐயா,
இது நான் அறியாத செய்தி. வைஷ்ணவர்கள் மீனாட்சி கோயிலுக்கு அம்மன் சன்னிதிக்கு மட்டும் வருவார்கள் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். வைஷ்ணவ தேவி என்று என்ன ஐதீகம்? விளக்குவீர்களா?
ரவி,
மிக நன்றாக எழுதுகிறீர்கள். ப்ரம்மோற்சவமும், சுப்ரபாதமும் தொகுப்பாக இருக்கிறதா? புத்தகமாக வெளியிட எண்ணியுள்ளீர்களா?
குமரன் அவர்களே,
மீனாட்சி பிறந்தது, மதுரைக் கோவிலில் உள்ள பொற்றாமரைக் குளத்தில் என்றுதான் நினைத்திருந்தேன். 'மனலூர்' என்று சொல்லுகின்றீர்களே?
//இவள் வைஷ்ணவ தேவி என்பது ஐதீகம//
கண்ணன் ஐயா,
இது நான் அறியாத செய்தி. வைஷ்ணவர்கள் மீனாட்சி கோயிலுக்கு அம்மன் சன்னிதிக்கு மட்டும் வருவார்கள் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். வைஷ்ணவ தேவி என்று என்ன ஐதீகம்? விளக்குவீர்களா?
//நா.கண்ணன் said...
எங்கேர்ந்துதான் இப்படி அழகு, அழகான படங்கள் எடுக்குறீங்களோ! மீனாட்சி கொள்ளை அழகு.//
வாங்க கண்ணன் சார்; படங்கள் பல நெட்டில் சுட்டவை தான் சார்; திருமலைப் படங்கள் பர்சனல் கலெக்சனும் கூட! ஆலயப் படங்கள் ஒரு தனி treasure box உம் உள்ளது!
//அவள் நாராயிணிதானே பின்னே எப்படி இருப்பாள்! இவள் வைஷ்ணவ தேவி என்பது ஐதீகம்//
ஸ்ரீதர் வெங்கட் ஒரு கேள்வி கேட்டுள்ளார் சார் பின்னூட்டத்தில்; கொஞ்சம் பாருங்கள்!
அருமையா எழுதியிருக்கீங்க KRS...
அன்னை தன்சேயைத் தாலாட்டுவது நியதி. ஆயினும் ஈங்கு குமரகுருபரருக்குக் கொடுப்பினை; அவர் தாலாட்டி அன்னையை உறங்கவைக்கப் பார்க்கிறார். முடியுமா? அன்னையும், மாலவவனும் பெருமாயை அல்லவா? அண்ணனும் தங்கையும் நம்மை உறங்கவைத்துவிடுவார்கள்.
சின்னஞ்சிறு சிறார்களுக்கு விளங்கும் வண்ணம் விளக்கும், இரவி, நீவிர் வாழ்க!
இதைக் கண்ணுற்றாவது நீள்துயிலிலிருக்கும் மக்கள் விழிக்கட்டுமே!
// SK said...
எப்படிப் புகழ்வது?
எதனைப் போற்றுவது?
அன்னை மீனாளின் அழகு பிள்ளைத் தமிழ்! அதற்கு அருமையான விளக்கம்!//
வாங்க SK ஐயா! ரொம்ப நாள் கழிச்சு நீங்க பதிவுக்கு வந்தா மாதிரி ஒரு ஃபீலிங்! உங்கள் கருத்தை அடிக்கடி வந்து சொல்ல வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்!
அதானே சிதம்பரம் என்றால் நடராசன், பழனி என்றால் முருகன் தான்!
சில சமயம் பஞ்சாமிர்தமும் லட்டும் தான் முதலில் நினைவுக்கு வந்து விடுகின்றன! :-))) வரட்டும் அதிலும் அவன் தானே இனிக்கிறான்! என்ன சொல்றீங்க!
//வடுவூர் குமார் said...
இன்னும் மதுரை மீனாட்சியை தரிசிக்க கொடுத்துவைக்கவில்லை//
குமார் சார் வாங்க!
என்னது மதுரைப் பக்கம் இன்னும் போகலையா? கவலையை விடுங்க!
நம்ம வலைப்பதிவு நண்பர்கள் அடுத்த முறை உங்களை மதுரைக்கு இழுத்து விடுவார்கள் பாருங்க! :-))
//குமரன் (Kumaran) said...
மிகச் சிறப்பாக எளிதாக விளக்கியிருக்கிறீர்கள் இரவிசங்கர். அம்மையின் பிள்ளைத்தமிழை இப்போது தான் முதன் முதலில் படிக்கிறேன். மிக்க நன்றி.//
குமரன் முதலில் படிக்கிறாரா! அதுவும் மீனம்மையின் பாட்டை! வியப்பாகத் தான் உள்ளது! தாலாட்டை நீங்கள் பாடிப் பாத்து சொல்லுங்கள் குமரன், எப்படி வருகிறது என்று!
//அன்னை பிறந்த ஊர் மணலூரா?//
இல்லை! எங்களுக்குத் தான் முதலில் சொந்தம்!:-))
திராச ஐயாவும் ரொம்ப மகிழ்வார்!
மற்ற மதுரைக்காரங்க என்ன சொல்றாங்கன்னு பார்ப்போம்! பிறகு சொல்கிறேன் ஊரின் பேரை!
மிக அருமையான பதிவு. நன்றிகள் பல. எல்லா பாடல்களையும் பதிவிட வேண்டுகிறேன்....
அன்னையவள் எம்தாயுமாவாள், அவளே என்சேயும், சகோதரியும்.
எங்களூர் மதுரையின், முகவரி
அவள்தாம், அவளின்றி நாங்களில்லை.
ஆடற்கலையானின் அறுபத்துநான்கதற்க்கும்
அவளே சாட்சி.
அவள் கோலமது நினைவிருத்தல்
அது, குலமது நிறைத்திடுமே!.
வீரமிகு மதுரையில்
அவள் வீரலக்குமியுமானாள்.
மந்திரிணியாய் வீற்றீருக்கும்
மங்கையவளே மீனாஷி.
கண்ணன் அவர்களே, தயவு செய்து, நாராயணி என்பதற்க்கு விளக்கம் தரவும். ஆர்வமாக இருக்கு தெரிந்து கொள்ள.
@இரவி கர்நாடக மாநிலத்தில் உள்ள தர்மஸ்த்தாலா போயிருக்கிறீர்களா? அங்கேதான் பஸ் ஸ்டாண்டுக்கு வந்து பஸ்சில் உள்ளவர்களையும் வருந்தி வருந்தி அழைத்து சாப்பாடு போடுவார்கள். அதுபோல நீங்களும் அழைத்துவந்து கண்ணுக்கு விருந்து வைக்கிறீர்கள் . நன்றி.நம்ம வட ஆற்காடு மாவட்டமா அன்னை பிறந்த ஊர்.
அன்னை அவதரிச்சது அக்கினிக்குண்டத்திலேன்னு படிச்சிருக்கேன். மணலூரில் புத்திர காமேஷ்டி யாகம் நடந்ததாகக் கேள்விப் பட்டிருக்கிறேன். சீக்கிரம் அன்னை தரிசனம் கிடைக்க வாழ்த்துக்கள்.இப்போவெல்லாம் அன்னையைத் தரிசிக்க ரூ.10/- கொடுக்க வேண்டி இருக்கிறது.
ரவி, இன்றைக்கு இந்தத் தென்னன் என் கண்ணில் இரண்டு முறை பட்டு விட்டது. முதலில் குமரன் பதிவில். இப்பொழுது உங்கள் பதிவில். தென்னவன் தீதிலன். :-)
திருச்செந்தூர் என்றால் முருகனே. திருத்தணியிலும் முருகனே. திருவரங்கத்தில் பெயருக்குள்ளேயே இருக்கும் அரங்கன். இன்னும் சொல்லலாம். ஆனா இங்க மானாவுக்கு மானா ஒத்துப் போச்சு. :-)
மீனாட்சி பிறக்கவில்லை. வேள்வியில் தோன்றிய நெருப்பு அவள். பாண்டியன் மதுரை தவிர்த்து வேறொரு ஊரில் வேள்வி நடத்தியிருப்பான் என்று நான் நம்பவில்லை. அப்படி நீங்கள் நூலாதாரம் கொடுத்தாலும் அது பிற்கால நூலாக இருக்கவே வாய்ப்புள்ளது.
இந்தப் பாடலில் குமரகுருபரர் சொல்லியிருப்பதையே பகழிக் கூத்தர் திருச்ச்செந்தூர் பிள்ளைத் தமிழில் சற்று வேறுவிதமாகச் சொல்கிறார். அதிலும் புனிற்று கவரி வருகிறது. :-)
பாம்பால் உததி தனைக் கடைந்து
படருங் கொடுங்கார்.....
.................
புனிற்று கவரி முலை நெரித்துப்
பொழியும் அமுதம் தனை
இங்க ஏன் பால் பொழியுதுன்னா...திருச்செந்தூர் குளத்துல அப்பக் கன்னு போட்ட எருமை இறங்குச்சாம். குளத்துல இருக்குற வரால்மீன் மடிய இடிச்சதும்...கன்னுதான் மடிய இடிக்குதோன்னு பாலைக் குளத்துல விட்டிருச்சாம் எருமை.
//Anonymous said:
ரவி,
மிக நன்றாக எழுதுகிறீர்கள். ப்ரம்மோற்சவமும், சுப்ரபாதமும் தொகுப்பாக இருக்கிறதா? புத்தகமாக வெளியிட எண்ணியுள்ளீர்களா?//
மிக்க நன்றி அனானி அவர்களே! பெயர் குறிப்பிடலாமே! :-)
பிரம்மோற்சவம் பதிவுகளை மென் நூலாகப் (pdf) போட்டுள்ளேன்; வலைப்பூவில், வலப்பக்கச் சுட்டிகளில் காணவும்!
சுப்ரபாதம் இப்போது தான் எழுதி வைக்கத் தொடங்கியுள்ளேன்! இறைவன் அருளால், நிச்சயம் தொகுப்பு ஆக்குகிறேன்!
//கண்ணன் ஐயா,
வைஷ்ணவ தேவி என்று என்ன ஐதீகம்? விளக்குவீர்களா?//
தாங்கள் விளக்கம் கேட்க விரும்புவதாக, கண்ணன் சாருக்குத் தனி மடல் அனுப்புகிறேன்;
ஓ...ஸ்ரீதர் வெங்கட்...தாங்கள் தானா அந்த அனானி:-)
கவனிக்க வில்லை! மன்னிக்கவும்!
//வெட்டிப்பயல் said...
அருமையா எழுதியிருக்கீங்க KRS... //
நன்றி பாலாஜி! அப்படியே ஒருக்கா வாய் விட்டு பாடுங்க! நாங்களும் கேட்டு மகிழ்வோம்! :-)
//ஞானவெட்டியான் said...
ஆயினும் ஈங்கு குமரகுருபரருக்குக் கொடுப்பினை; அவர் தாலாட்டி அன்னையை உறங்கவைக்கப் பார்க்கிறார். முடியுமா? அன்னையும், மாலவவனும் பெருமாயை அல்லவா? அண்ணனும் தங்கையும் நம்மை உறங்கவைத்துவிடுவார்கள்.//
ஹி ஹி...உண்மை தான் ஞானம் ஐயா! அவனை எழுப்புவதாக நம்மை எழுப்பிக் கொள்கிறோம்; அவளைத் தூங்க வைப்பதாக நம்மை ஆனந்தமா தூங்க வைத்துக் கொள்கிறோம்!
உங்கள் திருச்செந்தூர் பிள்ளைத்தமிழ் அருமை! நண்பர்களே ஐயாவின் வலைப்பூவில் அருமையா பத்துப் பருவங்களை விளக்கி உள்ளார்! அவசியம் காணுங்கள்!
சுட்டி இதோ
//சின்னஞ்சிறு சிறார்களுக்கு விளங்கும் வண்ணம் விளக்கும், இரவி, நீவிர் வாழ்க!//
அடியேன் தங்கள் ஆசி!
//இதைக் கண்ணுற்றாவது நீள்துயிலிலிருக்கும் மக்கள் விழிக்கட்டுமே!//
தங்கள் மேலான எண்ணத்துக்கு ஏற்றவாறு விழித்து விடுவார்கள் ஐயா! ஏற்கனவே விழித்து தான் உள்ளார்கள்! என்ன கவனச் சிதறல்கள் நிறைய! அன்னையின் அருள் அவர்களுக்கு இன்னும் நிறையக் கிடைக்க வேண்டுவோம்!
//Anonymous said...
அவள் கோலமது நினைவிருத்தல்
அது, குலமது நிறைத்திடுமே!.
வீரமிகு மதுரையில்
அவள் வீரலக்குமியுமானாள்.
மந்திரிணியாய் வீற்றீருக்கும்
மங்கையவளே மீனாஷி.//
Sridhar Venkat தானே இது? அருமை! அன்னை மீனாளைப் பற்றி நினைத்தவுடனே கவிதையாப் பொழிந்து இருக்கீங்க!
//தி. ரா. ச.(T.R.C.) said...
@இரவி கர்நாடக மாநிலத்தில் உள்ள தர்மஸ்த்தாலா போயிருக்கிறீர்களா? அங்கேதான் பஸ் ஸ்டாண்டுக்கு வந்து பஸ்சில் உள்ளவர்களையும் வருந்தி வருந்தி அழைத்து சாப்பாடு போடுவார்கள். அதுபோல நீங்களும் அழைத்துவந்து கண்ணுக்கு விருந்து வைக்கிறீர்கள்//
இன்னும் போனதில்லை திராச ஐயா! சொல்லக் கேள்வி! அடுத்த முறை நம் இந்தியா வரும் போது ஒரு பெரிய லிஸ்டே உள்ளது!
மிக்க நன்றி, உங்களுக்கு நான் தான் சொல்லணும்!
//நம்ம வட ஆற்காடு மாவட்டமா அன்னை பிறந்த ஊர்//
ஆமாம்:-)) அன்னை "அவதரித்த ஊர்"
//கீதா சாம்பசிவம் said...
அன்னை அவதரிச்சது அக்கினிக்குண்டத்திலேன்னு படிச்சிருக்கேன். மணலூரில் புத்திர காமேஷ்டி யாகம் நடந்ததாகக் கேள்விப் பட்டிருக்கிறேன்//
உண்மை தான் கீதாம்மா, யாகாக்னியில் வந்தவளே அன்னை!
சொல்கிறேன் எந்த ஊர் என்று! இறையடி சேர்ந்த நம் காஞ்சிப் பரமாச்சாரியார் கண்டு சொன்ன தகவல் இது!
//சீக்கிரம் அன்னை தரிசனம் கிடைக்க வாழ்த்துக்கள்.இப்போவெல்லாம் அன்னையைத் தரிசிக்க ரூ.10/- கொடுக்க வேண்டி இருக்கிறது.//
நாம கொடுத்துடலாம்; ஏழை மக்கள் என்ன செய்வார்கள் பாவம்! திருவரங்கத்திலும் கட்டண சேவை மனதை நெருடும் விடயம்! ஒரு காலத்தில் அந்நியர்கள் போட்ட அநியாய வரிகளுக்காக இது தேவைப்பட்டது! இல்லையென்றால் கோவிலைச் சேதப்படுத்தி விடுவதாக அந்நியர் மிரட்டல்!
இப்போது தேவையே இல்லையே! பேசாமல் எடுத்து விடலாம்!
//G.Ragavan said:
ரவி, இன்றைக்கு இந்தத் தென்னன் என் கண்ணில் இரண்டு முறை பட்டு விட்டது. முதலில் குமரன் பதிவில். இப்பொழுது உங்கள் பதிவில். தென்னவன் தீதிலன். :-)//
ஆம் புரியுது புரியுது! தென்னவா புரியுது! :-)
அது சரி; இப்படி கெட்ட அப்பை மாத்திடீங்களே! மாதவன் போய், இப்ப சூர்யாவா? ஆர்யாவா??...
பிச்சாலஜி பதிவு பாத்தவுடனேயே எனக்கு ஜிரா மேல ஒரு டவுட்டு தான் :-))
//மீனாட்சி பிறக்கவில்லை. வேள்வியில் தோன்றிய நெருப்பு அவள். அப்படி நீங்கள் நூலாதாரம் கொடுத்தாலும் அது பிற்கால நூலாக இருக்கவே வாய்ப்புள்ளது//
நான் இன்னும் நூலாதாரமே கொடுக்கலையே;
அதுக்குள் ஏன் இந்த அவசரம் சொற்கொல்லரே! :-))
//இங்க ஏன் பால் பொழியுதுன்னா...திருச்செந்தூர் குளத்துல அப்பக் கன்னு போட்ட எருமை இறங்குச்சாம். குளத்துல இருக்குற வரால்மீன் மடிய இடிச்சதும்...கன்னுதான் மடிய இடிக்குதோன்னு பாலைக் குளத்துல விட்டிருச்சாம் எருமை//
இதுவும் சூப்பர் தான்! அதானே முருகனைப் பாடுங்கால் கற்பனைக்கா பஞ்சம்!!
//சொற்கொல்லரே//
சொற்கொல்லரா? எந்தச் சொல்லைக் கொன்றார் அவர்? :-)
செஞ்சொற் பொற்கொல்லர் என்றல்லவா நான் அவரை அழைப்பது?!
/ குமரன் (Kumaran) said...
சொற்கொல்லரா? எந்தச் சொல்லைக் கொன்றார் அவர்? :-)//
அடடா; அதற்கு அர்த்தம் அப்படி ஆயிந்தா?...:-)) குமரன், நல்ல வேளை சொன்னீர்கள்!
பொற்கொல்லர் = பொன்னைக் கொல்வதில்லையே; பொன்னை மெருகல்லவோ ஏற்றுகிறார்!
அப்படிப் பார்த்தால் சொற்கொல்லரும் சொல்லை மெருகல்லவோ ஏற்றுகிறார்??
"சொல் ஒரு சொல்" லாய் சொல்லை மெருகேற்றுவதால் சொற்கொல்லர் என்பதில் பிழை எதும் உள்ளதா ஜிரா? :-)
அன்னை மீனாஷி அவளை ச்யாமளா என்றும் கூறுவோம்...ஸ்ரி சக்ர பிரயோகத்தில் இவளுக்கு அந்த பெயர். சியாமளா உருவமானது கலைவாணிக்கு உரியது.....
அந்த வரிகளை எழுதினது வெங்கட் அல்ல சார், நாந்தான்.....பிளாகரில்லா அனானி....ஹிஹிஹி.
மற்றும் ஒருதகவல், மினாஷி அவதாரம் அக்னிகுண்டத்தில், மலையத்வஜன் தவம் செய்ததால் அவனை புத்திர காமேஷ்டி யாகம் செய்யச்சொல்லி, அந்த யாகமுடிவில் அவதரித்ததாகத்தான் வரலாறு. அவள் மதுரை பாண்டியவம்சதிலகம், இன்றும் சித்திரை திருவிழா 7 / 8 ஆம் நாள் அவளுக்கு பட்டம் சூட்டி, செங்கோல் வழங்கி, மறுநாள் திக்விஜயம் செய்வித்து மகிழ்கிறோம்....
1. ஆடலரசனை ஆணாகவும், திருமாலைப் பெண்ணாகவும் கருதும் ஒரு வழக்கம் உள்ளது. திருமாலுக்கு மாயோன் என்ற பண்டையத் தமிழ்ப் பெயருண்டு. அன்னையை 'மாயோள்' என்கிறார் தொல்காப்பிய உரை ஆசிரியர். ஆக, அவள் நாராயணி.
2. வைணவ ஆச்சார்யரான நம்மாழ்வார், நாரணன் உடலில் அரைப்பாதியை சிவன் எடுத்துக் கொள்வதாகச் சொல்கிறார். இவர்களே சங்கர நாராயணர்கள். அப்படியிருந்தால் அர்த்தநாரியின் மிச்சப்பாதி உடம்பு 'நாராயணி' ஆகிறது.
3. தேவியை நாரணனின் தங்கை என்று சொல்வது வழக்கமாக இருந்தாலும் அத்வைத ஆச்சார்ய சீலர் காஞ்சி மகாப்பெரியவர் தனது அருளுரையில் தேவியைப் பெருமாளாகவே சொல்கிறார். இருக்கின்ற ஒன்று பிரியும் போது இரு பெரும் சக்திகளைத் தருகிறது. நாத, பிந்து என்பது. ஒன்று அறிவு, மற்றது சக்தி, மாயை அல்லது இயங்கு பொருள். இறைவன் மாயை கொண்டு உலகைப் படைக்கிறான் என்பதில் அத்வைதாதிகள், விஷிட்டாதுவைதிகள், தென்னிந்திய சைவ சித்தாந்திகள் இவர்களுக்குள் பேதமே கிடையாது. எனவே இயங்கு சக்தியான அன்னை மாயாவி, மாயோள். தியாகராஜர் சீதையை 'சீதம்மா! மாயம்மா! என்றுதான் பாடுகிறார்.
4. தந்திர, மந்திர வித்தகர்கள் மீனாட்சி கோயில் பிரதிஷ்டையாகியிருக்கும் சக்கரம் மகாவிஷ்ணுவின் சக்திவாய்ந்த ஸ்ரீசக்கிரம் என்று நம்புகின்றனர். எனவேதான் அவள் ஸ்ரீவைஷ்ணவி.
5. ஆதி சங்கரர் தனது ஸ்லோகங்களில் அம்பாளை முக்திப் பிரதாயினி என்று சொல்கிறார். சம்பிரதாயப்படி முக்தி தரக் கூடியவன் ஸ்ரீமன் நாராயணனே. எனவே மீனாட்சி ஸ்ரீவைஷ்ணவி.
பிள்ளைத்தமிழ் என்றதும் விட்டுப் போன ஒரு கருத்து ஞாபகத்திற்கு வந்தது:
பிள்ளை தமிழின் முன்னோடி பெரியாழ்வார். அவர் கண்ணனுக்குப் பாடிய தாலாட்டு, அவனை ஒவ்வொரு பருவமாகக் கொஞ்சுவது இதுவே பின்னர் தமிழ் இலக்கியத்தில் 'பிள்ளைத் தமிழ்' என்ற புதிய இலக்கிய வடிவைத் தருகிறது. அதனால் இங்கு மீனாட்சி பிள்ளைத் தமிழும் 'நாராயணீயமாக' அமைந்து விடுகிறது!
காஞ்சியா அல்லது அதற்கு அருகிலா? இன்னும் சொல்லவே இல்லையே? அநேகமாய் அன்னைத் தவம் செய்த மாமரத்தடியா?
//Anonymous said...
அந்த வரிகளை எழுதினது வெங்கட் அல்ல சார், நாந்தான்.....பிளாகரில்லா அனானி....ஹிஹிஹி//
அனானி அவர்களே! அன்னை மீனாளிடம் நீங்கள் கொண்டுள்ள மாறா அன்பு தெரிகிறது!
கண்ணன் சார் பதில் தந்துள்ளார் உங்களுக்கு! கண்டீர்களா?
//தியாகராஜர் சீதையை 'சீதம்மா! மாயம்மா! என்றுதான் பாடுகிறார்//
//அம்பாளை முக்திப் பிரதாயினி என்று சொல்கிறார். சம்பிரதாயப்படி முக்தி தரக் கூடியவன் ஸ்ரீமன் நாராயணனே. எனவே மீனாட்சி ஸ்ரீவைஷ்ணவி//
அருமையான விளக்கங்கள் கண்ணன் சார்! கூப்பிட்ட குரலுக்கு கண்ணனாய் வந்தீர்; மீள் வருகைக்கு நன்றி!
//நா.கண்ணன் said...
பிள்ளை தமிழின் முன்னோடி பெரியாழ்வார்.//
இதைச் சென்ற பதிவில், பிள்ளைத்தமிழ் ஆரம்பப் பதிவில் குறிப்பிட்டு இருந்தேன் சார்!
இரவி,
அருமையான பதிவுங்க.. நானும் இதேமாதிரி எங்க ஊரை பத்தி போடனுமின்னு இருக்கேன். அதிலே சேர்க்க நல்ல தகவல்களை கொடுத்திருகீங்க. நான் ctl+c ctl+v பண்ணிக்கலாமா???
//கீதா சாம்பசிவம் said...
காஞ்சியா அல்லது அதற்கு அருகிலா? இன்னும் சொல்லவே இல்லையே? அநேகமாய் அன்னைத் தவம் செய்த மாமரத்தடியா?//
கீதாம்மா இதோ சொல்லி விடுகிறேன்!
காஞ்சி மாமுனிவர், பரமாச்சாரியார் கண்டறிந்து சொன்னது இது!
அன்னை தோன்றிய தலமாகக் கருதப்படுவது தென்னாங்கூர்.
இது வடார்க்காடு மாவட்டம், வந்தவாசிக்கு மிக அருகில் உள்ளது!
தட்சிண ஹாலாசியம் என்ற பெயரும் இதற்கு உண்டு!
ஹாலாசிய மகாத்மியம் என்ற நூலும், பரஞ்சோதி முனிவரின் திருவிளையாடற் புராணத்திலும் இதற்கான குறிப்புகள் உள்ளதாகக் கருதுகின்றனர்!
இங்கே நண்பர்கள் சொன்ன அனைத்துக் குறிப்புகளும் சரியே!
யாக அக்கினியில் தோன்றியவளே அன்னை!
மலையத்வஜ பாண்டியனும் காஞ்சனமாலையும் புத்ர காமேஷ்டி யாகம் செய்ய விழைந்து சப்த ரிஷிகளை நடத்தித் தர அழைத்தனர்!
ரிஷிகளோ தென்னாங்கூர் தலத்தில் அப்போது வாசம்! சாதுர்மாச்ய விரதம் ஆகையால் எங்கும் வர முடியாத நிலை!
அதனால் யாகம் தென்னாங்கூரிலேயே நடந்தது; யாகாக்னியில் மூன்று வயதுக் குழந்தையாக அன்னை தோன்றினாள்; அவள் உருவ அமைப்பு பற்றி வானத்து அசரீரியும், தடாதகைப் பிராட்டியாக மதுரைக்கு அழைத்து வரப்பட்டுச் செல்வ மகளாக வளர்ந்ததும் அனைவரும் அறிந்ததே!
"மீனாட்சி தோன்றிய தலம்" என்றே இதைக் குறிக்கிறார் காஞ்சி பரமாச்சாரியார்! இங்கு அன்னைக்கும் சொக்கனுக்கும் ஆலயம் ஒன்றும் உள்ளது.
இதன் அருகிலேயே ஹரிதாஸ் கிரி சுவாமிகள் நிறுவிய பண்டரிபுரம் பாண்டுரங்கன்-ரகுமாயி சந்நிதி, கலை வேலைப்பாடுகளுடன் கூடியது; கட்டாயம் காண வேண்டும்!
//வாங்க, உங்க கருத்தையும் சொல்லுங்க! Post a Comment //
முன்னாடியே ஒரு கருத்து சொன்னேனே... அது வர்றலேய்யா???
:-((
//ராம் said:
//முன்னாடியே ஒரு கருத்து சொன்னேனே... அது வர்றலேய்யா???//
வாங்கய்யா, ராம் அய்யா :-)))
இப்ப வந்துடுச்சாய்யா!
//நானும் இதேமாதிரி எங்க ஊரை பத்தி போடனுமின்னு இருக்கேன். அதிலே சேர்க்க நல்ல தகவல்களை கொடுத்திருகீங்க. நான் ctl+c ctl+v பண்ணிக்கலாமா???//
அடடே! சீக்கிரம் உங்க ஊர்ஸ் பற்றி பதிவு போடுங்க!
ctl+c ctl+v அப்படி என்றால் என்ன?
ஹி ஹி...
தாராளமா.....
சத்சங்கம் கன ஜோராய் நடக்குது. ரொம்ப சந்தோஷம்.
மதுரைன்னு சொன்னதும் எனக்கு.............?
மாமியார் ஞாபகம்தான் வருது.
போட்டும், மாமியாரும் ஒரு 'அம்மா'தானே? :-))))
// கண்ணன் சார் பதில் தந்துள்ளார் உங்களுக்கு! கண்டீர்களா?//
ஆமாமுங்க....படித்தேன், ஆனால் அது எனக்கு அவ்வளவு சரியான மதிலாக தெரியவில்லை. அதாவது முக்தி என்பது எந்த கடவுளும் தர முடியும், அவரவர் இஷ்ட தெய்வத்திடம் மாறா பக்தி மற்றும் முக்தி தேடும் விடா முயற்சியுமே அங்கு முக்கியம். விடா முயற்சி அதிகமாக, அதிகமாக அத்வைதம் ஆட்டோமாடிக்காக அவனிடம்/அவளிடம் வந்து இஷ்ட/குல தெய்வங்களிடமிருந்து மெதுவாக நகர்த்திச் செல்லும்...செல்லவேண்டும். இதனால் தான் அத்வைதத்திலும் உருவவழிபாடுக்கு பாதை தந்தார் ஆதிசங்கரர் என்று நான் படித்து புரிந்து கொண்டுள்ளேன்...எனிவே, இங்கு கண்ணன் அவர்களது கருத்தினை மறுப்பதற்காக இதனை எழுதியதாக கொள்ள வேண்டாம்.
//காஞ்சி மாமுனிவர், பரமாச்சாரியார் கண்டறிந்து சொன்னது//
நான் அறியாத புதிய கருத்து, இதனை எங்கு படித்தீர் என கூற முடியுமா?.மேலும் ஹாலாஸ்ய மகாத்மீயம் புத்தகம் எங்கு கிடைக்கிறது, தயவு செய்து அட்ரஸ் தரவும்....
ஹும் நான் எப்படி இதை மறந்தேன். தென்னாங்கூர் அன்னையின் அவதாரத் தலம் என்று படித்திருக்கிறேனே. நீங்கள் கேள்வி கேட்ட போது மறந்துவிட்டேன்.
1998ல் ஒரு முறை தென்னாங்கூர் சென்று மீனாட்சி சுந்தரேஸ்வரரையும் பாண்டுரெங்கன் ரகுமாயியையும் ஞானாந்தகிரி சுவாமிகளின் தபோவனத்தையும் அங்கே ஒரு நாள் தங்கி தரிசித்து வந்தேன். அருமையான ஊர்.
அப்போதிலிருந்து ஒரு ஐயம். தென்னாங்கூர் மதுரையின் வடக்கே இருக்க அது எப்படி தட்சிண ஹாலாஸ்யம் ஆகும்?
//துளசி கோபால் said:
சத்சங்கம் கன ஜோராய் நடக்குது. ரொம்ப சந்தோஷம்.//
தங்கள் ஆசி என்றும் வேண்டும் டீச்சர்!
//மாமியார் ஞாபகம்தான் வருது.
போட்டும், மாமியாரும் ஒரு 'அம்மா'தானே? :-))))//
இதுவல்லவோ எங்க டீச்சர்!
அணுகுமுறையால் அகிலத்தையும் வசமாக்கலாம் ன்னு சும்மாவா சொன்னாங்க!
பார்க்கும் பார்வையில் பாசம் தெரிந்தால்
சேர்க்கும் வீட்டில் சிரிப்பும் மகிழ்வும்!
சரியா டீச்சர்?
//Anonymous said...
ஆமாமுங்க....படித்தேன், ஆனால் அது எனக்கு அவ்வளவு சரியான மதிலாக தெரியவில்லை//
பெயரே சொல்ல விரும்பாமல் இத்தனை கேள்விகளுக்கும் பதில் பெற முனைந்துள்ளீர்களே! நியாயமா? :-)
//அதாவது முக்தி என்பது எந்த கடவுளும் தர முடியும், அவரவர் இஷ்ட தெய்வத்திடம் மாறா பக்தி மற்றும் முக்தி தேடும் விடா முயற்சியுமே அங்கு முக்கியம்//
நாராயணி என்ற பதம் விளக்கவே அவ்வாறு சொன்னார் என்றே நான் கருதுகிறேன்! - 'முக்திப் ப்ரதாயினி'
மற்றபடி இன்ன கடவுள் தான் முக்தி அளிக்க வல்லவர் என்பது இங்கே விவாதப் பொருள் அன்று! முக்தி நாத் என்பதுடன் தொடர்புபடுத்தி எடுத்துக் கொள்ளுங்கள்!
யார் கொடுத்தாலும் அவன் கொடுத்தது தானே!
யார் வணக்கமும் அவன் வணக்கம் தானே!
//காஞ்சி மாமுனிவர், பரமாச்சாரியார் கண்டறிந்து சொன்னது
நான் அறியாத புதிய கருத்து, இதனை எங்கு படித்தீர் என கூற முடியுமா?//
இது நூலாக வந்ததா என்று தெரியவில்லை! "தெய்வத்தின் குரலில்" உள்ளதா என்றும் தெரியவில்லை! பல சொற்பொழிவுகளிலும், மாமுனிவர் பற்றிய தகவல் தொகுதிகளிலும் உள்ளது! கூகுளையும் வேண்டுமானால் உதவிக்கு அழைத்துப் பார்க்கவும்.
சுவாமி ஹரிதாஸ் கிரியும் அதனால் தான் இவ்விடத்தில் ஆலயம் அமைத்ததாகவும் செய்தி!
//குமரன் (Kumaran) said... அப்போதிலிருந்து ஒரு ஐயம். தென்னாங்கூர் மதுரையின் வடக்கே இருக்க அது எப்படி தட்சிண ஹாலாஸ்யம் ஆகும்?//
குமரன், எனக்கும் இந்த ஐயம் நெடு நாளாக உள்ளது!
ஹாலாஸ்யம் = மதுரை மட்டும் தானா? ஒரு வேளை வடக்கில் வேறு ஒரு ஹாலாஸ்யம் உள்ளதா?
இல்லை தென்+நாங்கூர் என்பதால் தட்சிண+ஹாலாஸ்யம் ஆயிற்றா?
அடுத்து
ஹாலாஸ்யம் = ஆலவாயா?
ஹாலாஸ்யம் என்றால் என்ன?
ஆலவாய் என்றால் என்ன?
ஆலம் என்றால் விஷம். அது வடமொழியில் ஹாலம் ஆகும். ஆலமுண்ட கண்டன்னு படிச்சிருப்பீங்களே. ஆலகால விஷம், ஹாலஹால விஷம் என்றும் படித்திருப்பீர்களே. ஆலம் என்றால் பாம்பு என்றும் பொருள். ஒரு முறை மதுரைக்கு எல்லை எது என்ற பாண்டியனின் கேள்விக்கு சிவபெருமானின் பாம்பு ஒன்று மதுரையைச் சூழ்ந்து கொண்டு தன் வாலைத் தன் வாயால் கவ்வி மதுரையின் எல்லையைச் சுட்டிக்காட்டியதாம். ஹாலாஸ்ய மஹாத்மியம், திருவிளையாடல் புராணம் சொல்லும் கதை இது. அப்படி ஆலம் தன் வாயால் தன் வாலைக் கவ்வி எல்லையைச் சொன்னதால் மதுரை ஆலவாய் ஆனது; வடமொழியில் அது ஹாலாஸ்யம் ஆனது. இது தான் புரிதல்.
//குமரன் (Kumaran) said...
ஆலம் தன் வாயால் தன் வாலைக் கவ்வி எல்லையைச் சொன்னதால் மதுரை ஆலவாய் ஆனது;//
அருமையான விளக்கம் குமரன்! அன்னையின் பதிவில் அவள் ஊரின் எல்லைக் கதையைச் சொன்ன உங்களுக்கு அடியேனின் நன்றிகள் பல!
வெகு அழகாகப் பொருளுரைத்திருக்கிறிர்கள். 'தொடுக்கும் கடவுட் பழம்பாடல் ' என்று தொடங்கும் பாடலை சிறுவயதில் படித்திருக்கிறேன்.
பாடல் அழகு கொஞ்சுகிறது.
தேவி விஷ்ணுவின் சகோதரி, விஷ்ணுமாயை வடிவினள். லலிதா சஹஸ்ரநாமத்தில் பல இடங்களில் வைஷ்ணவி, விஷ்ணுரூபிணி, விஷ்ணுமாயா, முகுந்தா என குறிப்பிடப்படுகிறாள்.
கண்னன் ஐயா அவர்களின் விளக்கத்தில் எனக்கு சில ஐயங்கள்
1//. தந்திர, மந்திர வித்தகர்கள் மீனாட்சி கோயில் பிரதிஷ்டையாகியிருக்கும் சக்கரம் மகாவிஷ்ணுவின் சக்திவாய்ந்த ஸ்ரீசக்கிரம் என்று நம்புகின்றனர். எனவேதான் அவள் ஸ்ரீவைஷ்ணவி//.
எனக்குத் தெரிந்தவரையில் ஸ்ரீசக்ரம் மகாவிஷ்ணுவின் சக்கரம் அல்ல. அது ஆயுதம் அல்ல. காஞ்சி காமட்சி அம்மன் கோயில் மற்றும் மூகாம்பிகை சன்னிதிகளில் ஆதிசங்கரரால் ஸ்ரீசக்ரம் ப்ரதிஷ்டை செய்யப்பட்டது. சக்தி வழிபாட்டில் ஸ்ரீசக்ரம் மிக முக்கியமானது. அதற்கும் விஷ்ணுவின் சுதர்சன சக்கரத்துக்கும் என்ன தொடர்பு என்று விளக்குவீர்களா?
//5. ஆதி சங்கரர் தனது ஸ்லோகங்களில் அம்பாளை முக்திப் பிரதாயினி என்று சொல்கிறார். சம்பிரதாயப்படி முக்தி தரக் கூடியவன் ஸ்ரீமன் நாராயணனே. எனவே மீனாட்சி ஸ்ரீவைஷ்ணவி //
ஆதிசங்கரர் முக்திப்ரதாயினி என்று சொல்வது திருமகளை மஹாலக்ஷ்மி ஸ்தோத்திரத்தில்.
"சித்திபுத்தி ப்ரதே தேவி புத்திமுக்திப் ப்ரதாயினி
மந்த்ரமூர்த்தே சதாதேவி மகாலக்ஷ்மி நமோஸ்துதே"
லலிதா சகச்ரநாமத்தில் "முக்திதா", "முக்திரூபிணி" (முக்தியை அளிக்கக்கூடியவள்) என்று தேவி அறியப்படுகிறாள்.
ரவிசங்கர் அவர்களுக்கு,
மிக அருமையான விவாதம். உங்கள் எழுத்துக்களில் ஒரு இதமான மென்மை மேலும் மேலும் படிக்கத்தூண்டுகிறது. தொடருங்கள் உங்கள் பணியை.
ஏதோ பின்னூட்டக் குழப்பம் பற்றி சிறு விவாதம் பார்த்தேன். எதற்கும் எனது முந்திய பின்னூட்டத்தை இங்கே மீள்-பின்னூட்டமிடுகிறேன் (பதிவுகள் மட்டும்தான் மீட்சி பெறுமா... பதிவு எதுவும் எழுதாத என் போன்றவர்கள் என்னதான் செய்வார்கள் அப்புறம்)
//ரவி,
மிக நன்றாக எழுதுகிறீர்கள். ப்ரம்மோற்சவமும், சுப்ரபாதமும் தொகுப்பாக இருக்கிறதா? புத்தகமாக வெளியிட எண்ணியுள்ளீர்களா?
.................
.................
.................
11:02 PM, November 26, 2006
//
எதற்கும் இருக்கட்டும் என்று எனது blogger profile-ல் ஒரு படத்தையும் இணைத்து விட்டேன்.
கண்ணன் ஐயா மற்றும் ஜெயஸ்ரீ அவர்களின் விளக்கங்களைப் படித்து புதிய விஷயங்களை தெரிந்துக் கொண்டேன்.
ஸர்வமங்கல மாங்கல்யே சிவே, ஸர்வார்த்த சாதிகே
சரண்யே த்ரயம்பகே, கௌரி, நாராயணி நமோஸ்துதே
என்று அன்னையை நாராயணி என்று நாம் வழிபடுகின்றோமே...
உங்கள் பணி தொய்வில்லாமல் தொடர அன்னை மீனாட்சி நிச்சயம் அருள் புரிவாள்.
//பெயரே சொல்ல விரும்பாமல் இத்தனை கேள்விகளுக்கும் பதில் பெற முனைந்துள்ளீர்களே! நியாயமா?//
மன்னிக்க வேண்டுகிறேன். நான் மதுரையை சேர்ந்தவன், இன்னும் பிளாக்கர் ஆகாத அனானி.
ஹாலஹால விஷம் பற்றி குமரன் கூறியதே எனக்கும் தெரிந்தது..இன்னுமொரு சிறு தகவல் அது பற்றி....தற்ப்போதைய மதுரையில் வடக்கு மாசிவீதியில் ஒரு கோவில் உள்ளது, அதன் பெயர் வட ஆலவாயன் கோவில்....என் சிற்றறிவுக்கு எட்டியவரையில் இது பிறப்பிடமாக இருக்க வாய்ப்புக்கள் அதிகம். ஆனால் பரமாச்சாரியார் சொன்னதாக அறிந்ததும், அதனை மறுக்க மனத்துணிவின்றி விட்டுவிட்டேன். ஆனால் அவர்கூற்றினை கன்பார்ம் பண்ணிக்கொள்ளும் காரணமாகவே அவர் கூறியதற்க்கு ஆதாரம் கேட்டேன். தவறிருந்தால் மன்னிக்க.
ஜெயஸ்ரீ கூறியுள்ளதையும் பார்த்தேன். அவர்களது கேள்வி சரியே!.
ஸ்ரீ சக்ரம் அன்பது அம்பாள் வசிக்கும் இடத்தின் 2 டைமென்ஷனல் ரெப்ரெசண்டேஷன். ஆனால் சுதர்சன சக்ரம் என்பது மகாவிஷ்ணுவின் ஆயுதமாகும்.
ஸ்ரீ வித்யா கிரமப்படி பார்த்தால், மத்தியில் உள்ள திரிகோணத்தில் உள்ள பிந்துவில் (த்ரிகோண மத்ய நிலையா) அவள் ரத்னசிம்மாசனத்தில் (ரத்ன சிம்ஹாசனேஸ்வரி) அமர்ந்து அகிலபுவனங்களையும் ஆட்சி செய்கிறாள். அவளது வலது புறம் இலக்குமியும், இடதுபுறம் சரஸ்வதியும் கவரிவிசுகிறார்கள், அம்பிகை லலிதாபரமேஸ்வரி ரத்ன சிம்மாசனத்தில் நேரடியாக உட்காரவில்லையாம். அந்த சிம்மாசனத்தில் பரமேஸ்வரன் படுத்தபடி இருக்க, அவன் மேல் அமர்ந்துள்ளாளாம். அந்த சிம்மாசனத்தின் நான்கு கால்களாக ருத்ரன், விஷ்ணு, பிரம்மா, சதாசிவன் இருக்கிறார்களாம். இது பஞ்ச பிரேதாசினா என்னும் தத்துவம்.
சண்ட, முண்ட வதம் மற்றும் மகிஷசுரவதங்களில் அம்பாளுக்கு சப்போர்டிவாக தங்களது சக்தியுனை அனுப்பும்விதமாக இலக்குமி வைஷ்ணவியாகவும் (தண்டினி - திருவானைக்காவல்), சரஸ்வதி சியாமளாவாகவும் (மந்திரிணி - மதுரை), மாறிய சமயத்தில் விஷ்ணு அவரது ஆயுதமான சுதர்சனத்தை வைஷ்ணவிக்கும், ருத்ர ரூபமான துர்கைக்கு ருத்ரனின் சூலமும் தந்ததாக வருகிறது.
முடிவாக,
ஸ்ரீவித்யா என்பது ஆச்சாரியார் ஸ்தாபித்த ஷண்மதங்களில், சாக்தத்தின் உச்சநிலை, இதில் மற்ற எல்லா தெய்வங்களும் பரிவார தேவதைகளாகத்தான் வருவார்கள். மேலும், இதனை தற்கால கோவில்களில் உள்ள தெய்வங்களுடன் mapping செய்வதென்பது கடினமே. மேலே கூறியுள்ளது தவிர பலதேவதைகள் ஸ்ரீச்க்ரத்தின் பல கோணங்களில் உள்ளனர்.
இதற்கென தனிப்பதிவுகள் இடலாம். அன்னை அருளிருந்தால் செய்யலாம்.
பிளாக்கர் ஆகாவிட்டாலும் தங்கள் பெயரினைக் கையொப்பமாக இடலாமே ஐயா. லலிதா சஹஸ்ரநாமத்தை அனுதினமும் பாராயணம் செய்பவராக நீங்கள் இருக்க வேண்டும். உங்கள் பின்னூட்டங்களை அதனைச் சொல்கின்றன. நீங்களும் அடியேனின் ஊரைச் சேர்ந்தவர் என்று அறியும் போது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. தாங்களும் விரைவில் பிளாக்கர் ஆகி அடியோங்களுக்கு நல்ல செய்திகளைச் சொல்லி அருள வேண்டும்.
வடக்கு மாசிவீதியில் இருக்கும் வட ஆலவாயன் திருக்கோவில் என்று சொல்லியிருக்கிறீர்கள். பழைய சொக்கநாதர் கோவிலைச் சொல்கிறீர்களா? அன்னையின் அவதாரத்தலம் பழைய சொக்கநாதர் கோவில் என்று படித்ததாக நினைவிருக்கிறது.
தெற்கு மாசி வீதியிலும் ஒரு திருவாலவாயான் திருக்கோவில் இருக்கிறது. அது தென் திருவாலவாய சுவாமி திருக்கோவில் என்று அழைக்கப்படுகிறது.
//ஜெயஸ்ரீ said:
வெகு அழகாகப் பொருளுரைத்திருக்கிறிர்கள்.
பாடல் அழகு கொஞ்சுகிறது.//
நன்றி ஜெயஸ்ரீ!
//ஆதிசங்கரர் முக்திப்ரதாயினி என்று சொல்வது திருமகளை மஹாலக்ஷ்மி ஸ்தோத்திரத்தில்.
"சித்திபுத்தி ப்ரதே தேவி புத்திமுக்திப் ப்ரதாயினி
மந்த்ரமூர்த்தே சதாதேவி மகாலக்ஷ்மி நமோஸ்துதே"//
நீங்கள் சொல்வது சரி தான் ஜெயஸ்ரீ! கனகதார ஸ்தவம், மகாலக்ஷ்மி அஷ்டக சுலோகம் அது!
லலிதா சகஸ்ரநாமத்தில்
முக்திதா, "முக்தி"ரூபிணி என்றும் சிவஞானப் "பிரதாயினி" என்றும் வெவ்வேறு இடங்களில் சங்கரர் சொல்கிறார்! கண்ணன் சார் இரண்டையும் எடுத்துக் கொண்டு அப்படிச் சொல்லிவிட்டாலும் அவர் சொல்ல வந்தது அவள் முக்தி தருவதால் "நாராயணி" என்ற கருத்து தான்!
மேலும் அவரே "சம்பிரதாயப்படி" என்றும் சொல்லி விட்டார்! முக்தியாகிய இறைநிலையை, நாம் பற்று அறுத்துப் பற்றும் எந்தத் தெய்வமும் தரவல்லது!
பல ஆசாரியர்கள் தங்கள் துதிகளில் அந்த அந்த இறை வடிவங்களிடம் முக்தி அருளவோ பிறப்பறுக்கவோ வேண்டுகின்றனர்! யாரிடம் வேண்டினாலும் இறைவனிடம் வேண்டுவது தானே! அவனைத் தானே சென்று அடைகிறது!
பல ஆசாரியர்கள் பலவிதமாக, பற்பல கோணங்களில் இருந்து இந்த முக்தி அருளல் பற்றிச் சொன்னாலும், அவர்கள் எல்லார் வாக்குக்குப் பொருள் சேர்க்கும் வண்ணமாய் அருள்பவன் யாரோ அவனே வந்து சொல்லி விட்டான் கீதையில்!
"மோக்ஷ இஸ்யாமி மா சுச" என்று அளிப்பவரே அறுதியிட்டுச் சொல்லி விட்டதால் தான் "சம்பிரதாயப்படி"
முக்தி தரக் கூடியவன் ஸ்ரீமன் நாராயணனே என்று வழங்கல் ஆயிற்று! அந்தக் கோணத்தில் இருந்து கண்ணன் சார் சொன்னதாகவே அடியேன் கருதுகிறேன்!
மேலும் கீதையில் எல்லா வழிபாடுகளும் அவனையே வந்து அடைவதாகச் சொன்னதால், முக்தியும் நாம் பற்றும் தெய்வ ரூபங்கள் வாயிலாகப் பரம்பொருளே அருளி விடுவதாக எடுத்துக் கொண்டால் எல்லா வியாக்யானங்களும் ஒன்று கூடி விடும்!
அடியேனைத் திருத்தி ஆட்கொள்ளுங்கள், சிந்தனையில் தவறு இருந்தால்!
//Sridhar Venkat said...
ரவிசங்கர் அவர்களுக்கு,
உங்கள் எழுத்துக்களில் ஒரு இதமான மென்மை மேலும் மேலும் படிக்கத்தூண்டுகிறது. தொடருங்கள் உங்கள் பணியை.//
Sridhar Venkat ஐயா
உங்கள் அன்புக்கும் ஆசிக்கும் அடியேனின் நன்றி! அடியேன் எழுத்தில் மென்மையா? :-)
எழுதும் பொருளான அன்னை அப்படி இருப்பதால் உங்களுக்கு மென்மை தோன்றுகிறது!
//பதிவு எதுவும் எழுதாத என் போன்றவர்கள் என்னதான் செய்வார்கள் அப்புறம்)//
பதிவு எழுதத் தொடங்கி எங்களைப் போன்றவர்களுக்கு நல்ல வழி காட்டுவார்கள்! சரியா சார்? :-)
//ரவி,
மிக நன்றாக எழுதுகிறீர்கள். ப்ரம்மோற்சவமும், சுப்ரபாதமும் தொகுப்பாக இருக்கிறதா? புத்தகமாக வெளியிட எண்ணியுள்ளீர்களா?//
பிரம்மோற்சவம் பதிவுகளை மென் நூலாகப் (pdf) போட்டுள்ளேன்; வலைப்பூவில், வலப்பக்கச் சுட்டிகளில் காணவும்!
சுப்ரபாதம் இப்போது தான் எழுதி வைக்கத் தொடங்கியுள்ளேன்! இறைவன் அருளால், நிச்சயம் தொகுப்பு ஆக்குகிறேன்
//லலிதா சகஸ்ரநாமத்தில்
முக்திதா, "முக்தி"ரூபிணி என்றும் சிவஞானப் "பிரதாயினி" என்றும் வெவ்வேறு இடங்களில் சங்கரர் சொல்கிறார்! கண்ணன் சார் இரண்டையும் எடுத்துக் கொண்டு அப்படிச் சொல்லிவிட்டாலும் அவர் சொல்ல வந்தது அவள் முக்தி தருவதால் "நாராயணி" என்ற கருத்து தான்! //
ரவி, நான் அங்கு சொல்ல வந்தது அந்தப் பதம் உள்ளது லலிதா சகஸ்ரநாமத்தில் அல்ல, லக்ஷ்மி அஷ்டகத்தில் என்றுதான் .
ஏனென்றால் மகாலக்ஷ்மி அஷ்டகம் ஆதி சங்கரர் அருளியது. லலிதா சகஸ்ரநாமம் வருவது மார்க்கண்டேய புராணத்தில்.
அதே பொருளுடைய பதம் லலிதா சகஸ்ரநாமத்திலும் வருகிறதே.
கண்ணன் அய்யா சொன்ன கருத்தில் எனக்கு எந்த மாறுபாடும் இல்லை. எங்கு சொல்லப்பட்டது என்பது ஒரு பெரிய விஷயம் அல்ல. இவற்றைக் கேட்டுக்கொண்டே வேலை செய்வதால் அனிச்சையாக வரிகள் மனதில் பதிந்துவிடுகின்றன. அவ்வளவே.
//முக்தியாகிய இறைநிலையை, நாம் பற்று அறுத்துப் பற்றும் எந்தத் தெய்வமும் தரவல்லது! //
100% உண்மை.
நான் சுட்டியது ஒரு மிகச் சிறிய factual errorஐ மட்டுமே.
//Anonymous said...
நான் மதுரையை சேர்ந்தவன், இன்னும் பிளாக்கர் ஆகாத அனானி//
குமரன் சொல்வது போல் கையொப்பம் இடுவதாக நினைத்து, பெயரை அடியில் எழுதிவிட்டால் மேட்டர் சிம்பிள் சார்:-)
//ஆனால் பரமாச்சாரியார் சொன்னதாக அறிந்ததும், அதனை மறுக்க மனத்துணிவின்றி விட்டுவிட்டேன். ஆனால் அவர்கூற்றினை கன்பார்ம் பண்ணிக்கொள்ளும் காரணமாகவே அவர் கூறியதற்க்கு ஆதாரம் கேட்டேன். தவறிருந்தால் மன்னிக்க//
நூலாதாரம் கிடைத்தால் தெரியப்படுத்துகிறேன் சார் (உங்கள் மின்மடல் முகவரி தந்தால்); Chennaionline has a page on Thennangur, where you can find Paramacharya's reference!
//அந்த சிம்மாசனத்தின் நான்கு கால்களாக ருத்ரன், விஷ்ணு, பிரம்மா, சதாசிவன் இருக்கிறார்களாம். இது பஞ்ச பிரேதாசினா என்னும் தத்துவம்//
//இதனை தற்கால கோவில்களில் உள்ள தெய்வங்களுடன் mapping செய்வதென்பது கடினமே//
இந்தத் தத்துவத்தைத் தென்னாங்கூர் மீனாட்சி ஆலயம்/ஷோடாக்ஷரி ஆலயத்தில் ரூபமாக வடித்து வழிபடுகிறார்கள், ரத்ன சிம்மாசனேஸ்வரியாக!
அங்கு சென்றால் தவறாது காணவும்!
ஸ்ரீவித்யா குறித்து அன்னையின் இந்தப் பதிவில் பல அரிய தகவல்கள் தந்த உங்களைப் பெயர் சொல்லிப் பாராட்ட முடியவில்லை என்ற ஏக்கம் தான்! :-) மிக்க நன்றி ஐயா!!
விளக்கங்களுக்கு மிக்க நன்றி அனானி ஐயா .
அன்பர்களே,
எல்லோருடைய பின்னூட்டங்களையும் படித்தேன்....
//தெற்கு மாசி வீதியிலும் ஒரு திருவாலவாயான் திருக்கோவில் இருக்கிறது. அது தென் திருவாலவாய சுவாமி திருக்கோவில் என்று அழைக்கப்படுகிறது.//
நன்றி குமரன், நான் தான் தவறாக குறிப்பிட்டுப்விட்டேன். ஆம் குமரன் தினம் என் தந்தை செய்துகொண்டிருந்த பூஜா விக்ரகங்கள் (அவரால் அதிகமாக தரையில் உட்கார்ந்து பூஜை செய்ய முடியவில்லை..தள்ளாமை) எல்லாம் என்னிடம் வந்துவிட்டது. அத்துடன் அவரது வழிகாட்டலில், எனக்கு முடிந்த அளவில் ஏதோ செய்கிறேன்....
//ஷோடாக்ஷரி ஆலயத்தில் ரூபமாக வடித்து வழிபடுகிறார்கள், ரத்ன சிம்மாசனேஸ்வரியாக! //
நன்றி கண்ணபிரான், நான் அங்கு சென்றுள்ளேன். என் குருநாதரின் மைத்துனர் தாம் அங்கு அந்த சன்னதியுன் அர்ச்சகர்...மிகவும் கற்றுத்தேர்ந்த ஸ்ரீவித்யா உபாசகர்...அந்த குடும்பத்தில் எல்லோரும் அப்படியே.
உங்கள் விருப்பபடியே, இதோ எனது பெயர், சந்திர மொளலி. மொளலி என்று அழைத்தால் நன்று.
//முக்தியாகிய இறைநிலையை, நாம் பற்று அறுத்துப் பற்றும் எந்தத் தெய்வமும் தரவல்லது!//
இது, இது அருமையான வாக்கியம். மிக்க நன்றி.
To All Interested:
Muththaa muththi tharavalla muzhilmen mulaiyaaL Umaipangaa,
Chiththa chiththith thiramkaattum thEevar ChingamEe
Paththa pththar palarpootrum parama pazhiyanoormeya
Aththa aalang gaataun atiyaarkku atiyEen AavEeNEe!
by Sundaramoorthy Naayanaar in ThiruAalangaadu..
PLease why point out so much in Athisankarar and other Sanskrit reference to see Ambal could offer Muththi.. My Sundarar has given in Tamil very beutifully and clearly. When you write in so good tamil but not properly refer Tamil Sources. We think Sanscrit is autority to say. However, I shall give all these explanation within Thevaatram. Next time ask me what Thevaaram says about these. I shall help you.
"சித்திபுத்தி ப்ரதே தேவி புத்திமுக்திப் ப்ரதாயினி
மந்த்ரமூர்த்தே சதாதேவி மகாலக்ஷ்மி நமோஸ்துதே"
The meaning above is different.
Chiththi and Puththi is from Ganesh. Gajalakshmi and Ganesh are very interrelated.
"Puththimuththip Prathaayini.."
means kaaranakarththa.. different from what Sundaramoorthi refers in his songs.
"SathaaDevi.." (similar to SathaaSiva) explains that she (Lakshmi) is in deep meditation on Saththi.
Lashmi's prayer in Thiruvaarur and in KanchiKaamkshi Temple are to be refered herein too for further research on this topic.
Thanks
Brihath Siromani
Sri Meenakshi Temple
Houston, Texas
scince_of_soul@yahoo.com
aval pugayai pada aval arul vendum amma meenakshi arulvai amma
Post a Comment