Tuesday, June 05, 2007

குருத்தோலைப் பெட்டி செஞ்சி...காதலன் படத் தாலாட்டு!

இதை வைத்துக் கொண்டு குழந்தைக்கும் விளையாட்டு காட்டலாம். காதலியையும் அசர வைக்கலாம். அதை எல்லாம் அனுபவஸ்தர்கள் அறிவார்கள்!
எப்பிடிப்பா? எப்பிடிப்பா??
அட, சும்மா நம்ம குருத்தோலையை வச்சிக்கினு தாம்பா!
போ....போயி குருத்தோலை உரிச்சிக்கினு வா...செஞ்சி காட்டறேன்!

அடப் பாவி...மாதா பிதா குரு தெய்வம்!
அப்பேர்பட்ட "குரு" தோலைப் போயி உரிச்சிக்கினு வரச் சொல்லுறியே! - இது உனக்கே அநியாயமாத் தெரியல?

டேய், குருத்தோலைன்னு பனை மர ஓலையை உரிக்கச் சொன்னாக்கா...நீ ரொம்பத் தான் ஷோக்கு காட்டறியா! இன்னா விஷயம்?
சரி..சரி...இந்தக் குழந்தை ரொம்ப அழுவுது பாரு! இந்த ஓலையை நறுக்கி ஒரு குச்சிக் காத்தாடி செய்யி....வைச்சு விளையாட்டுக் காட்டலாம்!

ஊருக்குப் போயிருந்த போது, நண்பரின் நாலு வயது மகனுக்குப் போக்கு காட்டிக் கொண்டு இருந்தேன்!
கிராமத்தில் கொஞ்ச நாளாச்சும் இருந்தவர்க்கு, இந்தக் குருத்தோலை அப்படி ஒரு பழக்கம். அத வைச்சி பல பொருட்கள் செய்யலாம்! பெட்டி, விசிறி, தோரணம், குடிக்கும் ஏணம் (கப்), குடை, குச்சிக் காத்தாடி... இன்னும் நிறைய.

குருத்தோலையைத் தான் தோரணம்-னு மாவிலையோடு கட்டுகிறோம், பண்டிகை நாட்களில்!
குருத்தோலை ஞாயிறுன்னு பள்ளியில் கொண்டாடிய நினைவுகள்!
எல்லாரும் குருத்தோலை பிடித்துக் கொண்டு பின்னே வர, அவர்களுக்கு முன்னே நான் ஃபாதர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க,
"ஓசானா பாடுவோம்", ன்னு பாடிக்கொண்டே சென்ற ஞாபகம்! ஆனா முடிக்கும் போது, கள்ளத்தனமா...சன்னமா...ஓம் முருகா-ன்னு சொல்லி, டப்புன்னு முடிச்சிடுவேன்! :-)ரொம்ப நாள் கழிச்சு, இந்தப் பிள்ளைத் தமிழ் பதிவு பக்கம் எட்டிப் பார்க்கிறேன்! இப்பல்லாம், ஆபீசில் ஆணி புடிங்கிட்டு, மீதி இருக்குற நேரத்தில...
தமிழைப் பார்ப்பதா, இல்லை பிள்ளைத்தமிழைப் பார்ப்பதா - நீங்களே சொல்லுங்க!

ஒரு அருமையான நாட்டுப்புறப் பாட்டு - தாலாட்டு பாட்டு கிடைத்தது.
அதுவும் பிள்ளைத் தமிழ் தானே! நாட்டுப்புறப் பிள்ளைத் தமிழ்!

காதலன் திரைப்படத்தில்,
இதன் முதல் சில வரிகளைப் பிரபுதேவா பாடுற மாதிரி ஒரு காட்சி! இனிமையான தாலாட்டு வரிகள்!
(அவரு யாரைத் தாலாட்டுகிறார்-ன்னு விவகாரமான கேள்வி எல்லாம் கேக்கக் கூடாது சொல்லிப்புட்டேன்...சரீய்ய்ய்ய் யாருப்பா அது? நம்ம சோதிகா அக்கா தானே! :-)

கொல்லை யிலே தென்னை வச்சி, குருத்தோலைப் பெட்டி செஞ்சி
சீனி போட்டுத் நீ திங்க, செல்லமாய்ப் பிறந்தவளோ!
மரக்கிளையில் தொட்டில் கட்ட, மாமனவன் மெட்டு கட்ட
அரண்மனைய விட்டு வந்த, அல்லி ராணி கண்ணுறங்கு...


ஒலிச்சுட்டி இதோ

ஆனா, இது ஒரு முழு நீள நாட்டுப் பாடல்! அருமையான தாலாட்டு!
வீல் வீல் என்று அழும் குழந்தைகளுக்கு, மருந்து ஊத்தித் தூங்க வைக்கும் கலி காலம் இது!
டாக்டர் தேவைப்பட்டா கொடுக்கச் சொன்னாருன்னு சமாதானம் வேற!
கேட்டா colic baby depressant ன்னு நல்லாவே இங்கிலிபிஷ்ல பேசறாங்க!

ஆனா நம்மூருல எதப்பா ஊத்தித் தூங்க வைச்சாங்க?
தமிழையும் பாட்டையும் அல்லவா தாலாட்டுப் பாலாடையில் ஊற்றித் தந்தார்கள்!
இந்த மாதிரிப் பாடக் கூட வேணாம், அப்படியே கொஞ்சம் ஹம் பண்ணாலே போதும், கொஞ்சும் பிஞ்சுகள் தூங்கிடாதா என்ன?
நாமும் கூடவே சேர்ந்தே தூங்கிப் போயிடுவோமே!
எங்க....................கூடவே, வாய் விட்டு, பாட்டு படிங்க பார்ப்போம்!


(செல்லமாய்ப் பிறந்தவனோ....)கொல்லையிலே தென்னை வச்சி, குருத்தோலை பெட்டி செஞ்சி
சீனி போட்டு நீ திங்க, செல்லமாய்ப் பிறந்தவனோ!
பட்டெடுத்து தொட்டில் கட்ட, பசும் பொன்னால் பொட்டுரைக்க
ஆட்டிடுங்க தாதியரே - என் அன்னக்கிளி கண்ணயர!


(செட்டியார் வளையல் மாட்ட வராரு...) வாருமய்யா வளையல் செட்டி, வந்திறங்கும் பந்தலிலே!
கோல வளையல் தொடும், குணத்துக்கொரு வளையல் தொடும்!
நீல வளையல் தொடும், நிறத்துக்கொரு பச்சை தொடும்!
அள்ளிப் பணம் கொடுத்து, அனுப்பி வைப்பார் உங்களப்பா!

-----------------------------------------------------------------------------


(பெருமாளு தான், காப்பு இருக்க வேணும்) கல்லெடுத்து கனி சொறிஞ்சு, கம்சனையே மார் வகுத்து
ஓலம் செய்யும் மாயனவன், ஒலகளந்த பெருமாளோ!
பச்சை முடி மன்னவரோ? பவழ முடி இராவணனின்
அச்ச மெல்லாம் தீர்க்க வந்த ஆதி நாராயணரோ?


(மாமன் கொண்டாந்த சீதனம்...) பால் குடிக்கக் கிண்ணி, பழம் திங்க சேனோடு
நெய் குடிக்கக் கிண்ணி, நிலம் பார்க்கக் கண்ணாடி
கொண்டைக்குக் குப்பி, கொண்டு வந்தார் தாய்மாமன்.
கல்லெடுத்து உங்க மாமன், காளியோட வாதாடி,
வில்லெடுத்து படை திரட்டும் வீமன் மருமகனோ?
-----------------------------------------------------------------------------
(ஓங்க அப்பாருக்கு காஞ்சிபுரத்து எண்ணெய் ஒத்துக்காதாம், மவனே!...)
காஞ்சிவரத் தெண்ணைய், கண்ணே கரிக்குதுன்னு
தெங்காசி எண்ணெய்க்கு, உங்கப்பா சீட்டெழுதி விட்டாக!
வாசலிலே வண்ணமரம், உங்கப்பா வம்சமே இராச குலம்
இராச குலம் பெற்றெடுத்த ரதமணியே கண்ணசரு!


(அட, இப்படியும் பால் காய்ச்சுவாங்களா, என்ன?....பூனை, புலி, ஆனைப் பால்) பூனைப் பால் பீச்சி, புலிப்பாலில் உறையூத்தி
ஆனைப்பால் காயுதில்ல, உங்கப்பா அதிகாரி வாசலிலே!
வெள்ளிமுழுகி என் கண்ணே, உன்னை வெகுநாள் தவசிருந்து
சனிமுழுகி நோம்பு இருந்து, நீ தவம்பெற்று வந்தவனோ!
-----------------------------------------------------------------------------

(கண்ணுறங்கு கண்ணுறங்கு)
கண்ணுறங்கு கண்ணுறங்கு மாயவனே கண்ணுறங்கு

கண்ணுறங்கு கண்ணுறங்கு மகிழம்பூ கண்ணுறங்கு
கண்ணுறங்கு கண்ணுறங்கு கண்மணியே கண்ணுறங்கு
கண்ணுறங்கு கண்ணுறங்கு பொன்மணியே கண்ணுறங்குபாட்டுக்கு விளக்கம் வேறு வேணுமா என்ன! :-)
கொல்லையிலே தென்னை வச்சி, குருத்தோலைப் பெட்டி செஞ்சி
- அந்த இண்டு இடுக்குப் பெட்டியில்...
ஆலையில் இருந்து கொட்டிய நாட்டுச் சக்கரை, சீனியைப் போட்டு, தின்று கொண்டே இருக்கலாம்!
- யாராச்சும் நெசமாலுமே குருத்தோலைப் பெட்டி செஞ்சிருக்கீங்களா? :-)

15 comments:

CVR said...
This comment has been removed by a blog administrator.
வடுவூர் குமார் said...

பாட்டெல்லாம் படிச்சு முடிக்கும் முன்னே அந்த குழந்தை மாதிரி கண்ணை கட்டுது.
என்ன பண்ணுகிறது இப்ப தான் மதியம் சாப்பாடு முடிந்தது.
அதென்னவோ தெரியலை,இந்த மாதிரி தூங்க குழந்தை முகத்தை பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல தோனும்,ஏதோ அதில் ஆயிரம் விஷயம் உள்ளது போல்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//வடுவூர் குமார் said...
பாட்டெல்லாம் படிச்சு முடிக்கும் முன்னே அந்த குழந்தை மாதிரி கண்ணை கட்டுது.
//

ஆகா...அப்ப பாட்டு படிக்காதீங்க..கேட்டுடுங்க.

//இந்த மாதிரி தூங்க குழந்தை முகத்தை பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல தோனும்,ஏதோ அதில் ஆயிரம் விஷயம் உள்ளது போல்//

ஹூம்...குழந்தை தூங்கும் போது பார்த்தா எங்க வீட்டுல அடி விழும். அப்படிப் பாக்கக் கூடாதுன்னு சொல்லிடுவாங்க...
ஆனா நீங்க சொல்றா மாதிரி அதில் ஆயிரம் விஷயம் உள்ளது, குமார் சார்!

வல்லிசிம்ஹன் said...

பாட்டா இது.பிள்ளை,அதைப் பெற்றதாய் எல்லோரும் உறங்கிவிடுவார்கள்.

சுவர்க்கம் போய்த் திரும்பி வந்தது போல இருக்கு ரவி.
இப்படியெல்லாம் பாடிக் கேட்டுத் தூங்கும் குழந்தை கொடுத்து வைத்தது.
தமிழுக்குத் தமிழ்.
பாசத்துக்குப் பாசம்.
இசைக்கு இசை.


நன்றி சொல்லிச் சொல்லி அலுத்தேவிட்டது.
வாழ்த்துக்கள்.:-)))))))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//வல்லிசிம்ஹன் said...
பாட்டா இது.பிள்ளை,அதைப் பெற்றதாய் எல்லோரும் உறங்கிவிடுவார்கள்.//

ஆமாம் வல்லியம்மா...
நானும் உறங்கி விட்டேன்! :-)

//இப்படியெல்லாம் பாடிக் கேட்டுத் தூங்கும் குழந்தை கொடுத்து வைத்தது.//

பாட்டு குழந்தைக்கா, இல்லை அதை விட நமக்கா? :-)

//நன்றி சொல்லிச் சொல்லி அலுத்தேவிட்டது. வாழ்த்துக்கள்//

போச்சு...உங்களுக்கும் அலுப்பு தட்டிடுச்சா! எதுக்கு வல்லியம்மா நன்றி சொல்லணும்? அலுப்பே வராத மாதிரி ஒரு போடு போடுங்க இது போல பதிவு எழுதறவங்களை!
எல்லாம் சரியாயிடும்! :-))

Anonymous said...

In that movie, this song is sung not for the child, but for the heroine.
How can we call this thalattu?
- Dr.Balu

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//Anonymous said...
In that movie, this song is sung not for the child, but for the heroine.
How can we call this thalattu?//

ஆகா..இதுக்குப் போய் நீங்க டென்சன் ஆகாதீங்க சார்.
பாட்டு தாலாட்டுப் பாட்டு தான்.
அதை சினிமாவில் யார் யாருக்கு வேணும்னாலும் பாடிக் கொள்கிறார்கள்.

சினிமா என்ன, வீட்டிலேயே செல்லப் பிராணிக்குப் பாட்டு பாடறாங்க!
அதுக்காக அது தாலாட்டு இல்லைன்னு ஆயிடுமா என்ன? :-)

தாலாட்டு என்பது குழந்தைகளுக்கு மட்டும் தானா? அப்படித் தான் உருவானது முதலில்! ஆனா பாடும் மனமும் சூழலும் பொறுத்து, யாருக்கு வேண்டுமானாலும் பாடலாம் என்பது நடைமுறை ஆகி விட்டது! சொல்லப்போனா, குழந்தையை விட நம்ம மன அமைதிக்குத் தான் தாலாட்டு பாடிக்கிறோம் இப்ப எல்லாம்! :-)

Anonymous said...

//சொல்லப்போனா, குழந்தையை விட நம்ம மன அமைதிக்குத் தான் தாலாட்டு பாடிக்கிறோம் இப்ப எல்லாம்! :-)//

Well said. It helps in our emotions. Thanks krs.
-Dr.Balu

அன்புத்தோழி said...

ஆகா அருமையான பாட்டு. தாலாட்டு பாட்டு பாடும் போது நமக்கே ஒரு சங்கீத வித்வானியோனு தோணுது. அந்த அளவுக்கு சுருக்கமாவும், மனசார சொந்த ராகத்திலேயும் பாடிக்கலாம். நானும் இந்த பாட்டை வீட்டுல பாடிக்கிட்டு இருப்பேன். யாரு தூங்கராங்களோ இல்லையோ நான் தூங்கிடுவேன்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//அன்புத்தோழி said...
ஆகா அருமையான பாட்டு. தாலாட்டு பாட்டு பாடும் போது நமக்கே ஒரு சங்கீத வித்வானியோனு தோணுது.//

தோணுமே! :-)
அதாங்க நாட்டுப் பாடல்களில் உள்ள ஒரு பெரிய ப்ளஸ் பாயிண்ட்.
என்னைப் போல கத்துக்குட்டிங்க எல்லாம் கூட, காலரைத் தூக்கி விட்டுக்க இது சுலபமான வழி!

Anonymous said...

ஓ குருத்தோலைப் பெட்டி நான் செய்திருக்கின்றேனே..

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ந.ஜெ.ஜெய புஷ்ப லதா said...
ஓ குருத்தோலைப் பெட்டி நான் செய்திருக்கின்றேனே..//

வாங்க புஷ்ப லதா!
குருத்தோலைப் பெட்டி செஞ்சிருக்கீங்களா? சூப்பரு!
அதுல என்ன போட்டுச் சாப்பிட்டீங்க? :-)

கார்த்திக் பிரபு said...

hi add me my page link in ur blog

its a googlepage for tamil free e books

http://gkpstar.googlepages.com/

thanks for adding my page

G.Ragavan said...

இந்தக் கொடுமைய நான் எங்கன்னு சொல்லுவேன். பெரபுதேவா நகுமான்னு நகும்மாதிரி சொல்லீட்டு..பாட்டப் பாடுனது ஆருன்னு சொல்லலையேய்யா! பாடுனவரு ஜெயச்சந்திரன். இப்பிடியெல்லாம் சொல்லாம இருக்குறது தப்பு.

என்னது ஓலைப்பெட்டிய பாத்திருக்கீங்களாவா! அதுலதானய்யா வாழ்ந்தோம். சீரணி, காரச்சேவு, சீவலு, கருப்பட்டி, சில்லுக்கருப்பட்டி...இன்னும் என்னமுஞ் சொல்லுங்க. சின்ன வயசுல அதெல்லாம் எங்களுக்குப் ஓலப்பெட்டீலதானய்யா கெடச்சது. அந்த ஓல வாசமும் சீரணி வாசமும் கலந்து திங்கைல...அடடா! அடப் போங்கய்யா! பர்கர் கிங்காம் ட்விஸ்ட் பிரையாம். ஊர்ல இருந்து வரைல கருப்பட்டிச் சீரணிய எங்க தாத்தா ஓலப்பெட்டீல வாங்கி, தூக்குவாளில பாட்டி செஞ்ச கோழிக் கொழம்பும் கொண்டு வருவாரே....தாத்தா..தாத்தா... :((((((((((((((

Ramesh DGI said...

I would highly appreciate if you could guide me through this. Thanks for the article…
Tamil News | Tamil Newspaper | Latest Tamil News | Kollywood News

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP